ஸ்ரீநகர்: டில்லியில் ஏற்பட்ட கார் குண்டுவெடிப்பு வழக்கைச் சுற்றியுள்ள விசாரணை தீவிரமடைந்த நிலையில், ஜம்மு-காஷ்மீரில் உள்ள எட்டு வெவ்வேறு இடங்களில் தேசிய புலனாய்வு அமைப்பான என்ஐஏ இன்று விரிவான சோதனை நடத்தி வருகிறது.
செங்கோட்டை பகுதியில் நவம்பர் 10 அன்று மாலை கார் ஒன்று திடீரென வெடித்ததில் 15 பேர் உயிரிழந்தது. இந்த தாக்குதலை ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த டாக்டர் உமர் நபி நடத்தியது விசாரணையில் வெளிச்சத்துக்கு வந்தது. அவர் தற்கொலைப்படை உறுப்பினராக இந்த வெடிப்பில் ஈடுபட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்திய இந்த பயங்கரவாதத் தாக்குதலை தொடர்ந்து, என்ஐஏ விசாரணையைத் துரிதப்படுத்தி வருகிறது. இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் அல் பலாஹ் மருத்துவ பல்கலை முக்கிய விசாரணை மையமாக மாறியுள்ளது. கைது செய்யப்பட்ட அனைவரும் அந்தப் பல்கலையுடன் தொடர்புடையவர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தாக்குதலின் பின்னணி, திட்டமிடல் மற்றும் ஆதரவினரைக் கண்டறிய என்ஐஏ பல திசைகளில் தேடுதல் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. இதன் ஒரு பகுதியாக புல்வாமா, ஷோபியன் மற்றும் குல்காம் மாவட்டங்களில் உள்ள எட்டு முக்கிய இடங்களில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
செங்கோட்டை பகுதியில் நடந்த கார் குண்டுவெடிப்புக்குப் பொறுப்பான பயங்கரவாத வலையமைப்பை முறியடிக்க இந்த சோதனைகள் முக்கிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என விசாரணை குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.