சென்னை: சிவகங்கை மாவட்டத்தில் இரண்டு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட பேரழிவில் 11 பேர் உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்புத்தூர் அருகேயுள்ள கும்மங்குடியில் நடந்த இந்த விபத்தில், ஒரு பஸ் டிரைவர் மற்றும் 9 பெண்கள் உட்பட 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் தீவிர காயங்களுடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த விபத்து நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், பலரும் சமூக வலைதளங்களில் இரங்கலைத் தெரிவித்துவருகின்றனர்.
பிரதமர் நரேந்திர மோடி, விபத்தில் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து ஆழ்ந்த துயரத்தை பகிர்ந்து சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில்,
“தமிழகத்தின் சிவகங்கையில் நடந்த பேருந்து விபத்தில் பலர் உயிரிழந்தது மிகுந்த வேதனை அளிக்கிறது. தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.
மேலும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இந்த துயர சம்பவத்துக்கு இரங்கல் தெரிவித்து நிவாரண தொகையை அறிவித்துள்ளார். அவரது அறிவிப்புப்படி,
உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ. 3 லட்சம்,
தீவிர காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 1 லட்சம்,
சிறு காயம் ஏற்பட்டவர்களுக்கு தலா ரூ. 50 ஆயிரம்
முதல்வர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.
சிவகங்கையை உலுக்கிய இந்த பேருந்து மோதி விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.