சென்னை:
பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் துறையாக சரக்கு போக்குவரத்து திகழ்கிறது. கச்சா பொருட்கள், தயாரிப்பு பொருட்கள், பொதுப் பயன்பாட்டு பொருட்கள், ஏற்றுமதி சரக்குகள் உள்ளிட்ட அனைத்தையும் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல சரக்கு வாகனங்கள் பெரிதும் உதவுகின்றன.
இதில், டீசலில் இயங்கும் வாகனங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. அதிக எடையை இழுப்பதிலும், நீண்ட நேர செயல்திறனிலும், எரிபொருள் சிக்கனத்திலும் டீசல் என்ஜினுக்கு இணையானது இல்லை. பொருளாதார ரீதியாகவும் டீசல் வாகனங்கள் நிறுவனங்களுக்கும் விவசாயிகளுக்கும் லாபகரமாக செயல்படுகின்றன.
இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதத்தில் நாட்டில் சரக்கு வாகனங்கள், விவசாய பயன்பாடுகள், ரெயில் என்ஜின்கள் உள்ளிட்ட துறைகளில் பயன்படுத்தப்பட்ட டீசல் அளவு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாக ஸ்ரீராம் நிறுவனம் வெளியிட்ட ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதில், நவம்பரில் மொத்தம் 85.5 லட்சம் டன் டீசல் பயன்படுத்தப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இது அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 12% அதிகரிப்பு ஆகும். அக்டோபரில் டீசல் பயன்பாடு 67.9 லட்சம் டன் ஆக இருந்தது. கடந்த மே மாதத்திற்குப் பிறகு, டீசல் பயன்பாடு அதிகபட்ச அளவை நவம்பரில் மீண்டும் தொட்டுள்ளது. மே மாதத்தில் பயன்பாடு 85.7 லட்சம் டன் ஆக இருந்தது.
அதே நேரத்தில், நவம்பர் மாதத்தில் பெட்ரோல் பயன்பாடு 4% குறைந்துள்ளது. கடந்த மாதத்தில் நாட்டின் மொத்த பெட்ரோல் பயன்பாடு 35 லட்சம் டன் மட்டுமே என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.