புதுடெல்லி:

நாட்டில் ஜி.எஸ்.டி. வரி அமைப்பில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சிகரெட், புகையிலை பொருட்கள் போன்றவற்றுக்கு 40% சிறப்பு வரி விதிக்கப்பட்டது. இந்த முறை கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

இந்நிலையில், புகையிலை, பான் மசாலா மற்றும் ஆடம்பரப் பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. இழப்பீடு வரி (செஸ்) காலாவதியானபின்னர், அதற்குப் பதிலாக கூடுதல் வரி விதிக்க இரண்டு மசோதாக்கள் டிசம்பர் 1ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டன. இதில் பான் மசாலா உள்ளிட்ட பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் நோக்கில் கொண்டு வரப்பட்ட சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் மசோதா, நேற்று மக்களவையில் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விவாதத்தை தொடங்கி வைத்த நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறுகையில்:

“பான் மசாலாவிற்கு கலால் வரி விதிக்க முடியாததால், உற்பத்தி அலகுகளின் உற்பத்தி திறனைத் தழுவி வரி விதிக்க தனி செஸ் மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இது பாவப்பொருள் வகையில் வரையறுக்கப்பட்டதால், இந்த கூடுதல் வரி மூலம் நுகர்வு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்தியாவசியப் பொருட்களுக்கு இந்த சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ் விதிக்கப்படாது. பான் மசாலா மீது விதிக்கப்படும் இந்த கூடுதல் வரி மூலம் கிடைக்கும் வருவாயின் ஒரு பகுதி மாநிலங்களுக்கு வழங்கப்படும். அந்த நிதி, சுகாதார விழிப்புணர்வு மற்றும் பிற சுகாதாரத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும்.

பான் மசாலாவிற்கு தற்போதுள்ள 40% ஜி.எஸ்.டி. தொடர்ந்து நீடிக்கும். அதற்கு மேலாக, உற்பத்தி திறனை அடிப்படையாகக் கொண்டு ‘சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு செஸ்’ விதிக்கப்படும். இது நாட்டின் இரண்டு முக்கியத் துறைகளான சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்புக்கு நிலையான வருவாய் ஆதாரத்தை உருவாக்கும்,” என்று கூறினார்.