சென்னை:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கும் புதிய படம் ‘வா வாத்தியார்’ மூலம் திரைக்கு வரவிருக்கிறார். இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடித்துள்ளார். ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். சத்யராஜ், ராஜ் கிரண் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் முன்பே வருகிற 12ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது.
எனினும், சென்னை உயர் நீதிமன்ற சொத்தாட்சியர் தரப்பில் மனு ஒன்றை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தொழிலதிபர் அர்ஜுன்லால் சுந்தர்தாஸ், 2014ஆம் ஆண்டு திவாலானவர் என அறிவிக்கப்பட்டு, அவரது சொத்துக்களை நிர்வகிக்க சொத்தாட்சியர் நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டார். ஸ்டூடியோ கிரீன் படத் தயாரிப்பு நிறுவனம் அவரிடம் இருந்து ரூ.10.35 கோடி கடன் பெற்றிருந்தது. வட்டி சேர்க்கப்பட்டும் அந்த தொகை தற்போது ₹21.78 கோடி ஆக உயர்ந்துள்ளது.
மனுவில், அந்த தொகையை ஞானவேல் ராஜாவிடம் செலுத்த உத்தரவிடவும், அதே நேரத்தில் ‘வா வாத்தியார்’ திரைப்படம் வெளியிட இடைக்கால தடை விதிக்கவும், படம் மூலம் கிடைக்கும் வருவாயை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட கோரப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை வருகிற 5ம் தேதி வரை வெளியிட இடைக்கால தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது. வழக்கின் அடுத்த கட்ட விசாரணை வரும் 8ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.