சென்னை:

‘சிறை’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் விக்ரம் பிரபு மற்றும் புதிய முகம் எல்.கே. அக்ஷய் குமார் இருவரும் திரையுலகில் பெரும் கவனம் பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாது, விமர்சகர்களிடமிருந்தும் பாராட்டுகளை பெற்றது.

இயக்குனர் சுரேஷ் ராஜ்குமாரி இயக்கியிருந்த இந்த ‘சிறை’ திரைப்படம் சமூக செய்தியுடன் கூடிய வித்தியாசமான திரைக்கதையால் பேசுபொருளானது. இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடித்த அறிமுக நடிகர் எல்.கே. அக்ஷய் குமார், தனது இயல்பான நடிப்பாலும் திரையில் வெளிப்படுத்திய உணர்ச்சி பூர்வமான காட்சிகளாலும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார்.

‘சிறை’ திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அக்ஷய் குமார் தற்போது ‘ராவடி’ என்ற புதிய படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருகிறது. தற்போது தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைக்கதைகள் மற்றும் கமெர்ஷியல் அம்சங்களை இணைத்து படங்களை தயாரித்து வரும் இந்த நிறுவனம், ‘ராவடி’ படத்திலும் அதே தரத்தை நோக்கி செயல்படுகிறது என படக்குழுவினர் கூறுகின்றனர்.

படத்தை இயக்குநர் விக்னேஷ் வடிவேல் இயக்கி வருகிறார். ‘ராவடி’ திரைப்படம் ஆக்ஷன், டிராமா, உணர்ச்சி கலந்த கதை அமைப்பைக் கொண்டதாகவும், இதில் எல்.கே. அக்ஷய் குமார் புதிய லுக் மற்றும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

படப்பிடிப்பு தற்போது சென்னை மற்றும் மதுரை பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சில முக்கிய காட்சிகள் ஏற்கனவே முடிவடைந்துள்ளன. இந்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் சமீபத்தில் ‘சிறை’ திரைப்படத்தின் வெற்றியை நினைவுகூரும் வகையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டதாகவும், படக்குழுவினர் கூறியுள்ளனர்.

தற்போது ‘ராவடி’ படத்தின் முதல் லுக் விரைவில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ‘சிறை’ வெற்றியின் வேகத்தை தொடர்ந்து, எல்.கே. அக்ஷய் குமார் தமிழ் சினிமாவில் தனது நிலையை உறுதியாக்குவார் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.