ஸ்மிருதி மந்தனா – பலாஷ் முச்சால் திருமணம் ரத்து

மும்பை: இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா, மராட்டிய மாநிலம் சாங்லியைச் சேர்ந்தவர். சமீபத்தில் மகளிர் உலகக் கோப்பையை வெல்ல இந்திய அணிக்கு முக்கிய பங்காற்றிய அவர், மகளிர் ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான வீராங்கனைகளில் ஒருவராக விளங்குகிறார்.

29 வயதான மந்தனாவும், மத்தியபிரதேசத்தைச் சேர்ந்த பிரபல இசையமைப்பாளர் பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வந்தனர். சில நாட்களுக்கு முன்பு மோதிரம் மாற்றி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். கடந்த நவம்பர் 23-ம் தேதி சாங்லியில் உள்ள மந்தனாவின் பண்ணை வீட்டில் திருமணம் நடைபெற திட்டமிடப்பட்டு, மெஹந்தி விழாவும் நடைபெற்றது.

ஆனால் திருமணத்திற்கு முன்பே மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனால் திருமணம் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டது. பின்னர் பலாஷ் முச்சலும் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையில், பலாஷ் முச்சல் வேறு ஒருவருடன் நெருக்கமாகப் பேசியதாகக் கூறப்படும் ‘ஸ்கிரீன்ஷாட்கள்’ இணையத்தில் பரவியதால், திருமணம் நிறுத்தப்பட்டதற்கான உண்மையான காரணம் குறித்து பெரும் சர்ச்சை எழுந்தது.

இந்த சூழலில், ஸ்மிருதி மந்தனா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலாஷ் முச்சலுடன் பகிர்ந்திருந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை நீக்கினார். திருமண கொண்டாட்ட புகைப்படங்களையும் அகற்றியதால் சந்தேகம் அதிகரித்தது.

இந்நிலையில், ஸ்மிருதி மந்தனா – பலாஷ் முச்சல் திருமணம் அதிகாரபூர்வமாக ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மிருதி மந்தனா தனது சமூக வலைதளத்தில், “என் வாழ்க்கையைப் பற்றி பல ஊகங்கள் எழுந்துள்ளன. நான் தனிப்பட்ட நபர், ஆனால் திருமணம் ரத்து செய்யப்பட்டதை வெளிப்படையாகச் சொல்ல வேண்டும். இந்த விஷயம் முடிந்துவிட்டது. இரு குடும்பங்களின் தனியுரிமையை மதித்து, எங்களுக்கு முன்னேற இடம் கொடுக்கவும். இந்தியாவுக்காக நீண்ட காலம் விளையாடி கோப்பைகளை வெல்வதே என் கவனம். உங்கள் ஆதரவுக்கு நன்றி. முன்னேற வேண்டிய நேரம் இது” என பதிவிட்டுள்ளார்.