மும்பை: சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய வீரர் விராட் கோலி இதுவரை 84 சதங்கள் அடித்துள்ளார். (ஒருநாள் போட்டியில் 53, டெஸ்ட் போட்டியில் 30, T20 போட்டியில் 1). அண்மையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் இரண்டு சதங்கள் விளாசினார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்கள் அடித்த சாதனையை சச்சின் தெண்டுல்கர் (100 சதங்கள்) பெற்றுள்ளார். இந்த சாதனையை விராட் கோலி சமன் செய்வார் என இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: “விராட் கோலியால் 100 சதங்கள் அடிக்க முடியாதது ஏன்? அவர் இன்னும் மூன்று ஆண்டுகள் விளையாடினால் 16 சதங்கள்தான் தேவை. தற்போது அவர் சிறப்பான பேட்டிங் செய்து வருகிறார். தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் இரண்டு சதங்கள் அடித்தார். அடுத்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று ஒருநாள் போட்டிகளில் இரண்டு சதங்கள் அடித்தால், அவரது சதங்களின் எண்ணிக்கை 86 ஆகும். அதன் பிறகு 100 சதங்களை எட்டுவதற்கு அவருக்கு நல்ல வாய்ப்பு உள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் வலுவான அடித்தளம் அமைத்ததால் இந்தியாவின் வெற்றி உறுதி என்பதை உணர்ந்த கோலி, மகிழ்ச்சியுடன் அதிரடியாக விளையாடினார். ஒருநாள் கிரிக்கெட்டில் கோலி இவ்வாறு ஆட்டம் ஆடுவது அரிது,” என்றார்.