அகமதாபாத்: ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் நடந்த இறுதிப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது ரஜத் பட்டிதார் தலைமையிலான ஆர்சிபி அணி. இந்த தொடரில் ரஜத் பட்டிதார் ஐநூற்றோன்று ரன்கள் விளாசி சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தார்.
இறுதிப் போட்டிக்கு பின்னர் ஆர்சிபி அணിയின் கேப்டன் ரஜத் பட்டிதார் கூறியதாவது: கடந்த ஆண்டு எங்களுக்கு மிகப்பெரிய அழுத்தம் இருந்தது. ஆனால் இம்முறை தொடர் முழுவதும் நாங்கள் விளையாடிய விதம் காரணமாக, நிதானமாகவும் அமைதியாகவும் இருந்தது.
இந்த ஆண்டு நாங்கள் சாதாரணமாக விளையாடவில்லை, ஒட்டுமொத்த தொடரையும் எங்களது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்தோம். இதே போல் தொடர்ந்து விளையாடினால், நிச்சயமாக இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்வோம் என்பதில் நாங்கள் மிகவும் நம்பிக்கையுடன் இருந்தோம். அடுத்ததாக நாங்கள் மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வது எப்படி என்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
எனது கேப்டன்சி முறை சற்று வித்தியாசமானது. நான் மைதானத்தில் உணர்ச்சிகளை அதிகம் வெளிப்படையாகக் காட்டிக் கொள்ள மாட்டேன், ஆனால் அதே சமயம் போட்டியின் சூழ்நிலையை முழுமையாக உணர்ந்திருப்பேன். விராட் கோலியை பற்றி விவரிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. மாபெரும் சிறந்த வீரரான அவர், எப்போதும் சிறந்த செயல்களை செய்வதையே வழக்கமாகக் கொண்டவர்.
மைதானத்துக்கு உள்ளேயும் சரி, மைதானத்துக்கு வெளியேயும் சரி, அவரிடமிருந்து கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு எங்கள் அனைவருக்கும் கிடைத்துள்ளது. நான் அவரைப் பார்க்கும் போதெல்லாம், அவர் எப்போதும் அணிக்காகவும் அனைத்து வீரர்களுக்காகவும் முன்னிற்கிறார்.
ஆர்சிபி அணிக்காக நான் இரண்டு ஐபிஎல் கோப்பைகளை வெல்வேன் என்று கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை. நாங்கள் வெற்றி பெற வேண்டும் என முன்பே எழுதப்பட்டள்ளது. வெற்றி கோப்பையை கடந்த ஆண்டு கூட்ட நெரிசலில் இறந்தவர்களுக்கு அர்ப்பணிக்க விரும்புகிறேன். அந்த உணர்வை வெளிப்படுத்த வார்த்தைகளே இல்லை. இவ்வாறு ரஜத் பட்டிதார் கூறினார்.