டி20 சாதனையில் திலக் வர்மா ஏற்றம் – கில், கோலியை முந்தி 3வது இடம்; ருதுராஜ் கெய்க்வாட் முதலிடம்

தர்மசாலா: இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் 3வது ஆட்டம் தர்மசாலாவில் நேற்றிரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்க அணி இந்திய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 20 ஓவர்களில் 117 ரன்னில் சுருண்டது. அணியின் கேப்டன் மார்க்ரம் மட்டுமே 61 ரன்கள் எடுத்து எதிர்ப்பை காட்டினார்.

இந்தியா தரப்பில் ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ், வருண் சக்ரவர்த்தி ஆகிய நான்கு பேரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி தென் ஆப்பிரிக்க அணியை கட்டுக்குள் வைத்தனர். பின்னர் எளிய இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 15.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 120 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. திலக் வர்மா 26 ரன்களுடனும், ஷிவம் துபே 10 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியால் இந்தியா தொடரில் 2–1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. ஆனால் இந்த ஆட்டத்தில் வெற்றியை விட அதிகம் பேசப்பட்ட விஷயம் திலக் வர்மா பதிவு செய்த சாதனையே. அவர் 24 ரன்கள் எடுத்தபோது டி20 கிரிக்கெட்டில் 4,000 ரன்களை கடந்தார். இந்த மைல்கல்லை அவர் வெறும் 125 இன்னிங்ஸ்களில் எட்டியுள்ளார்.

இதன் மூலம் டி20 கிரிக்கெட்டில் குறைந்த இன்னிங்ஸ்களில் 4,000 ரன்கள் அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் திலக் வர்மா 3வது இடத்தை பிடித்துள்ளார். இதனால் அவர் சுப்மன் கில் மற்றும் விராட் கோலியை பின்னுக்கு தள்ளியுள்ளார். இந்த சாதனையில் ருதுராஜ் கெய்க்வாட் முதலிடத்திலும், கே.எல். ராகுல் இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

இந்திய வீரர்களின் சாதனை பட்டியல் (குறைந்த இன்னிங்ஸ்களில் 4,000 ரன்கள்):

  1. ருதுராஜ் கெய்க்வாட் – 116 இன்னிங்ஸ்கள்

  2. கே.எல். ராகுல் – 117 இன்னிங்ஸ்கள்

  3. திலக் வர்மா – 125 இன்னிங்ஸ்கள்

  4. சுப்மன் கில் – 129 இன்னிங்ஸ்கள்

  5. விராட் கோலி – 138 இன்னிங்ஸ்கள்

திலக் வர்மாவின் இந்த சாதனை, இந்திய டி20 அணியில் அவர் நிலைபெறுவதற்கான முக்கிய அடையாளமாக பார்க்கப்படுகிறது. தொடரின் மீதமுள்ள போட்டிகளில் அவர் மேலும் என்ன அசத்தப் போகிறார் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.