வங்காளதேசத்தில் இந்து வாலிபர் கொடூரக் கொலை – 10 பேர் கைது
டாக்கா: வங்காளதேசத்தில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் மாணவர்கள் முன்னெடுத்த போராட்டம், அப்போது பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சியை கவிழ்த்தது. அதன் பின்னர், ஹசீனா தனது சகோதரியுடன் ஆகஸ்ட் 5-ந்தேதி நாட்டை விட்டு வெளியேறி, இந்தியாவில் தஞ்சமடைந்தார். இதையடுத்து, பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டு, அவர் தலைமை ஆலோசகராக செயல்பட்டு வருகிறார்.
இந்த அரசியல் மாற்றத்திற்குப் பிறகு, நாட்டில் வன்முறை சம்பவங்கள் அதிகரித்தன. கிளர்ச்சியில் ஈடுபட்ட முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷெரீப் உஸ்மான் ஹாதி (32), “இங்குலாப் மாஞ்சா” என்ற அமைப்பை நிறுவி அரசியலில் ஈடுபட்டார். அவர் டாக்காவின் பிஜோய்நகர் பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பினர். சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வந்த அவர், கடந்த வியாழக்கிழமை உயிரிழந்தார். இதனால் வங்காளதேசம் முழுவதும் வன்முறை வெடித்தது.
இந்த வன்முறையில் முன்னாள் கல்வி மந்திரி மொகிபுல் ஹசன் சவுத்ரியின் வீடு தீ வைத்து எரிக்கப்பட்டது. நாட்டின் நிறுவன தந்தை ஷேக் முஜிபுர் ரகுமானின் வீடும் சூறையாடப்பட்டது. இந்திய துணைத்தூதரின் வீட்டிலும் கல்வீச்சு சம்பவம் நடந்தது.
இந்த சூழலில், மைமன்சிங் நகரைச் சேர்ந்த திபு சந்திரதாஸ் (25) என்ற இந்து வாலிபர், துணி தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அவர் மத நிந்தனை செய்ததாக குற்றம் சாட்டி, ஒரு கும்பல் அவரை ஆடைகளை களைந்து நிர்வாணப்படுத்தி, கம்பத்தில் கட்டி வைத்து அடித்து கொலை செய்தது. பின்னர் அவரது உடலை சாலையில் எரித்தது. இந்த கொடூர சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இடைக்கால அரசு இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இதேபோன்று, பத்திரிகையாளர் இம்தாதுல் ஹக் மிலோன் குல்னா பகுதியில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். வன்முறை கும்பல்கள் தி டெய்லி ஸ்டார் மற்றும் புரோதம் ஆலோ பத்திரிகை அலுவலகங்களில் புகுந்து சூறையாடி, தீ வைத்து எரித்தனர்.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் வன்முறை பரவி பதற்ற நிலை ஏற்பட்ட நிலையில், இந்து வாலிபர் கொலை மற்றும் உடல் எரிப்பு வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 19 முதல் 46 வயதுக்குள் உள்ளவர்கள். இதில் 7 பேரை விரைவு அதிரடி படையினர் கைது செய்தனர்; மீதமுள்ள 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், “புதிய வங்காளதேசத்தில் இதுபோன்ற வன்முறைக்கு இடமில்லை. குற்றவாளிகள் தப்ப முடியாது” எனக் கூறினார். ஷேக் ஹசீனா பதவியில் இருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதில், இந்து மக்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.