கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்
கன்னியாகுமரி மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு, மாவட்ட காவல்துறை விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் தெரிவித்ததாவது: மக்கள் அதிகம் கூடும் கடற்கரை, சுற்றுலா தலங்கள், தனியார் விடுதிகள் போன்ற இடங்களில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டுமெனில், அவை முறையான அனுமதி பெற்ற பின்னரே நடைபெற வேண்டும். அனுமதி இல்லாமல் நிகழ்ச்சிகள் நடத்தினாலோ அல்லது அனுமதிக்கப்பட்ட நேரத்தை மீறினாலோ, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்தார்.
பாதுகாப்பு பணிகளில் மொத்தம் 1,500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் மாவட்டம் முழுவதும் 78 தற்காலிக சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு, 5 Highway Patrol, 7 Crime Control Patrol, 5 Emergency Response Patrol, 5 Four Wheeler Patrol, 30 Mobile Patrol, 2 Tourist Patrol ஆகிய நான்கு சக்கர ரோந்துகள் மற்றும் 27 இருசக்கர ரோந்துகள் செயல்படுத்தப்படுகின்றன. இவை அனைத்தும் சுற்றுலா தலங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் தீவிர கண்காணிப்பை மேற்கொள்ளும். விதிமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என எஸ்.பி. வலியுறுத்தினார்.
மேலும், குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலோ, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டாலோ, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாலோ, சம்பந்தப்பட்டவர்களுக்கு வழக்கு பதிவு செய்து வாகனம் பறிமுதல் செய்யப்படும். கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும். அதோடு, அவர்களது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
பண்டிகை காலங்களில் திருட்டு சம்பவங்களை தடுக்கும் நோக்கில், சீருடை இல்லாத போலீசார் சாதாரண உடையில் பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் குற்றத்தடுப்பு ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்களது நகைகள், உடமைகள் ஆகியவற்றை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். வெளியூருக்கு செல்லும் போது வீடுகளுக்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு, அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பண்டிகை காலத்தை பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் கொண்டாட, சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள், விபத்துகள், திருட்டு சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க காவல்துறை மேற்கொள்ளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். பண்டிகையை சிறப்பாகக் கொண்டாட அனைவருக்கும் மாவட்ட காவல்துறை சார்பில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.