கானாவில் பரபரப்பு: உலகம் அழியும் என தீர்க்கதரிசி, நோவா பேழைகள் கட்டும் முயற்சி

ஆக்ரா: உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில், கானா நாட்டில் வியப்பூட்டும் சம்பவம் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் தினம் (டிசம்பர் 25) அன்று உலகம் அழியும் என தீர்க்கதரிசனமாக கூறியுள்ள எபோ நோவா என்ற நபர், மக்களை காக்கும் நோக்கில் நோவா பேழைகளை கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

எபோ நோவா தன்னை தீர்க்கதரிசியாக அறிவித்து, சாக்கு துணியில் செய்யப்பட்ட கிழிந்த ஆடைகளை அணிந்து வாழ்கிறார். சில சமயங்களில் அவர் கூறிய விஷயங்கள் நடந்ததாகக் கூறப்படுவதால், அவரை நம்பும் சீடர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், அவரது பேச்சுகள் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகின்றன.

இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் தினத்தில் உலகம் அழியும் என அவர் தொடர்ந்து கூறி வந்தார். அதற்கான முன்னெச்சரிக்கையாக, நோவா பேழைகளை கட்டத் தொடங்கினார். இந்தப் பேழைகள் 3 ஆண்டுகள் வரை வெள்ளத்திலிருந்து மக்களை காக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டதாக அவர் கூறுகிறார். பெருவெள்ளம் நாளை வரும், அதன் மூலம் உலகம் முடிவுக்கு வரும், அதை கடவுள் செய்வார் என அவர் வலியுறுத்துகிறார்.

அவரது கூற்றை நம்பிய பின்தொடர்பவர்கள் தங்களுடைய சொத்துகளை விற்று, கிடைத்த பணத்தை அவருக்கு வழங்கியுள்ளனர். அந்த நிதியுதவியால் பேழைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், சீடர்கள் அவரை தேடி குவிந்து வருகின்றனர். சிலர் கால்நடைகளையும் திரட்டி கொண்டு வந்து, பேழைகளில் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

எபோ நோவா, “நாங்கள் கடவுளின் இரக்கத்திற்காக வேண்டி கொள்கிறோம். ஆனால் கடவுள் அமைதியாக இருக்கிறார். ‘நிறுத்து’ என அவரது குரல் கேட்கும் வரை பேழையை கட்டிக் கொண்டே இருப்பேன். இறைவழிபாட்டுடன் எனக்கு ஆதரவு அளியுங்கள்” என தெரிவித்துள்ளார்.

ஆனால், வேதத்தில் உலகத்தை அழிக்க மீண்டும் பெருவெள்ளம் ஏற்படாது என தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அவரது தீர்க்கதரிசனத்தை பலர் சந்தேகத்துடன் பார்க்கின்றனர். இருந்தாலும், அவரை நம்பும் மக்கள் பெருவெள்ளம் வரும் என்ற அச்சத்தால், அவருடன் இணைந்து செயலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் கானா நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் உற்சாகத்துடன், உலகம் அழியும் என்ற அச்சமும் மக்களிடையே கலந்துள்ளது.