சென்னை: திருச்சி மண்ணச்சநல்லூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கதிரவனின் ஆதரவாளர்கள் வீடு வீடாகச் சென்று ரூபாய் எண்ணாயிரம் பரிசு கூப்பன் வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் சிந்துஜா என்ற இளம்பெண் வீட்டிற்கு கூப்பன் கிடைக்கவில்லை.

திமுக ஆதரவாளர்களிடம் கேட்டபோது அவர்கள் சிந்துஜாவை ஆபாசமாகப் பேசி தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மன உளைச்சல் அடைந்த சிந்துஜா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் திமுகவின் கூப்பன் நாடகத்தால் இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாகவும், இதற்கு தவெக தலைவர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். திமுகவின் எண்ணாயிரம் ரூபாய் கூப்பன் நாடகத்தால் திருச்சி மண்ணச்சநல்லூரில் சகோதரி ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.

மக்களை ஏமாற்றுவதைத் தன் கடமையாகக் கொண்டுள்ள திமுக, தற்போதைய தேர்தலில் எண்ணாயிரம் ரூபாய் கொடுப்பதாகக் கூறி வாக்காளர்களை ஏமாற்றுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் ஏமாற்றியாவது வெற்றி பெற வேண்டும் என்ற தோல்வி பயம் காரணமாக இக்கூப்பன் அறிவிப்பு.

சாதாரண மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கான தேர்தலை சதுரங்க வேட்டையாக மாற்றியுள்ளது. அதிகாரப் பசிக்காக அப்பாவிகளை ஏமாற்றி பிழைக்க முயல்கிறது. மக்களை ஏமாற்றும் மண்ணுளிப் பாம்பா அல்லது வாக்காளர்களை ஏமாற்றும் ரைஸ் புல்லிங்கா இந்த எண்ணாயிரம் ரூபாய் கூப்பன்.

இன்று இந்த ஜனநாயக விரோத கூப்பன் விநியோகத்தில் திமுகவினரின் ஆபாச வார்த்தைகளைத் தாங்க முடியாமல் மன உளைச்சலால் சகோதரி தன்னுடைய உயிரை மாய்த்துக்கொண்டார். இந்தக் கொடூரச் செயலுக்கு காரணமான கயவர்கள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.

மக்களை ஏமாற்றும் இத்தகைய சதிகார சதுரங்க வேட்டை மோசடிகளைத் தேர்தல் ஆணையம் உடனடியாகத் தலையிட்டு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுத்து நிறுத்த வேண்டும் என விஜய் வலியுறுத்தியுள்ளார்.

இந்தச் சம்பவம் திமுகவுக்கு எதிராக பெரும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. தேர்தல் களத்தில் கூப்பன் மோசடி குறித்த விமர்சனங்கள் தீவிரமடைந்துள்ளன.