டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இந்தியாவின் ரூ.4 ஆயிரம் கோடி நிதியுதவி

கொழும்பு: இம்மாத தொடக்கத்தில் இலங்கையை தாக்கிய டிட்வா புயல் அந்த நாட்டில் பெரும் அழிவை ஏற்படுத்தியது. பல மாவட்டங்களில் வீடுகள், சாலைகள், பாலங்கள், மின்சார வசதிகள், விவசாய நிலங்கள் அனைத்தும் கடுமையாக சேதமடைந்தன. இந்த புயலால் 643 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வீடுகளை இழந்து தற்காலிக முகாம்களில் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்த கடுமையான சூழ்நிலையில், இலங்கைக்கு உதவிடும் வகையில் இந்திய அரசு முன்வந்துள்ளது. ஆபரேஷன் சாகர் பந்த் என்ற திட்டத்தின் கீழ் இந்தியா நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. உணவு, மருந்துகள், குடிநீர், தற்காலிக குடியிருப்பு வசதிகள் போன்ற அடிப்படை தேவைகள் இந்தியாவின் உதவியுடன் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்றடைந்துள்ளன.

மேலும், பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்பு தூதராக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி எஸ். ஜெயசங்கர் இலங்கை சென்றுள்ளார். அவர் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார். பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடி அவர்களின் நிலையை அறிந்துகொண்டார். பின்னர் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை சந்தித்து, இந்தியாவின் ஆதரவு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து விவாதித்தார்.

இந்நிலையில், டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு ரூ.4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்க இந்தியா திட்டமிட்டுள்ளது. இதில் ரூ.3 ஆயிரம் கோடி கடன் அடிப்படையில் வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. மீதமுள்ள தொகை நிவாரண உதவிகளாக வழங்கப்படும். இந்த நிதியுதவி, புயலால் சேதமடைந்த பகுதிகளை மறுசீரமைக்கவும், அடிப்படை வசதிகளை மீண்டும் உருவாக்கவும் பயன்படுத்தப்பட உள்ளது.

இந்தியாவின் உதவி, இரு நாடுகளுக்கிடையேயான நட்பு மற்றும் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் பார்க்கப்படுகிறது. புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி நிவாரணம் அளிப்பதோடு, நீண்டகால மறுசீரமைப்புக்கும் இந்த நிதியுதவி பெரும் பங்களிப்பாக இருக்கும்.

இலங்கையில் ஏற்பட்ட இந்த பேரழிவு, அந்த நாட்டின் பொருளாதாரத்தையும் சமூக அமைப்பையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்தியாவின் உதவி, இலங்கைக்கு புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் உள்ளது.