திருவொற்றியூர் ஆதிபுரீஸ்வரர் கவசம் திறப்பு – இன்று இரவு நிறைவு

திருவொற்றியூர் வடிவுடையம்மன் கோவிலில் உள்ள ஆதிபுரீஸ்வரர் சிலையின் வெள்ளிக்கவசம், கார்த்திகை மாத பவுர்ணமி விழாவையொட்டி நேற்று முன்தினம் மாலை சிறப்பு பூஜைகளுடன் திறக்கப்பட்டது.

முதல் நாளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கவசம் இன்றி ஆதிபுரீஸ்வரரை தரிசிக்க வந்ததால், கோவில் நடை நள்ளிரவு 12 மணி வரை திறக்கப்பட்டு பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது. இரண்டாம் நாளான நேற்று அதிகாலை முதலே பக்தர்கள் பெருமளவில் திரண்டனர். பலர் கோவில் முன்பு விடிய விடிய காத்திருந்து அதிகாலையிலேயே தரிசனம் செய்தனர்.

இன்று கடைசி நாள் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இரவு 8 மணிக்கு நடைபெறும் அர்த்தஜாம பூஜைக்கு பிறகு ஆதிபுரீஸ்வரர் சிலையில் வெள்ளிக்கவசம் மீண்டும் மூடப்படும். மூன்று நாட்களும் புனுகு சாம்பிராணி தைல அபிஷேகம், மகா அபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

இந்த நிகழ்ச்சியில் பூஜை செய்யப்பட்ட புனுகு சாம்பிராணி தைலம் பிரசித்தி பெற்றதால், கோவில் நிர்வாகம் அதை சிறிய டப்பாவில் ரூ.20 கட்டணத்தில் விற்பனை செய்கிறது. மேலும், சிறப்பு வழியில் தரிசனம் செய்ய விரும்பும் பக்தர்கள் ரூ.25 மற்றும் ரூ.100 கட்டணங்களை செலுத்தி டோக்கன் பெற்று செல்லலாம். விழா ஏற்பாடுகளை கோவில் உதவி கமிஷனர் நற்சோனை மற்றும் ஊழியர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இதனால் திருவொற்றியூர் நோக்கி வரும் மெட்ரோ ரெயில்கள், பஸ்களில் கூட்டம் அலைமோதுகிறது. தேரடி பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.