திருமலை:
திருப்பதி திருமலையில் அமைந்துள்ள அனந்தாழ்வார் தோட்டம் (புரசைவாரி தோட்டம்) பகுதியில், வைணவ சாம்பிரதாயத்தின் பெருமகனும் ஆழ்வார்களில் சிறந்தவருமான ஸ்ரீ அனந்தாழ்வாரின் 972வது அவதார மகோற்சவம் சிறப்பாக நடைபெற்றது.

இந்த விழா, திருமலைத் திருப்பதி தேவஸ்தானம் ஏற்பாட்டில், வேதபாராயண குழுவினரின் மந்திர ஒலிகளும், பக்தர்களின் கோஷங்களும் ஒலித்த நிலையில் நடைபெற்றது. திருமலை முழுவதும் ஆனந்தாழ்வாரின் திருநாமம் ஒலித்த நிலையில் பக்தர்கள் பெருமளவில் பங்கேற்று ஆனந்த நெகிழ்ச்சியில் மூழ்கினர்.
விழாவில் தேவஸ்தான இணை அதிகாரி ஏ. சரத் முதன்மை விருந்தினராக கலந்துகொண்டு பக்தர்களைச் சந்தித்து உரையாற்றினார். அவர் தனது உரையில், “அனந்தாழ்வாரின் அவதார மகோற்சவத்தில் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது எனது பூர்வஜென்ம புண்ணியம் எனக் கருதுகிறேன். பக்தி என்பது வெறும் பிரார்த்தனை அல்ல; பக்தி என்பது தெய்வத்துக்கான சேவை. இதனை தனது வாழ்நாள் முழுவதும் செயலால் நிரூபித்தவர் அனந்தாழ்வார்,” எனப் பக்தியோடு உரையாற்றினார்.
அவர் மேலும் கூறியதாவது: “அனந்தாழ்வார், திருவேங்கடமுடையான் மீது கொண்டிருந்த அன்பும், சேவை உணர்வும் தலைமுறைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டு. இன்று அவரின் வம்சத்தினர், திருமலையில் ஏழுமலையானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து வருவது அந்தப் புனித பாரம்பரியத்தின் தொடர்ச்சியாகும். இந்த அரிய ஆன்மீகச் சேவை என்றும் நிலைத்திருக்க வேண்டுமென நான் விரும்புகிறேன்,” என்றார்.
மகோற்சவம் நிறைவில் அனந்தாழ்வாரின் திருவுருவத்துக்கு அபிஷேகம், பூஜை, தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. பின்னர் பக்தர்களுக்கு தீர்த்த, பிரசாத விநியோகம் செய்யப்பட்டது. திருமலை முழுவதும் பக்திமிகு சூழலில் நடைபெற்ற இந்த விழா, அனந்தாழ்வாரின் பக்தி, துறவு, சேவை ஆகியவற்றின் பெருமையை மீண்டும் நினைவூட்டியதாக அமைந்தது.