திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே உள்ள அய்யனேரி கிராமத்தில், திரவுபதி அம்மன் கோவில் திருவிழாவின் போது திருடுபோன 10 சவரன் தங்கச் செயின், அருள்வந்த பெண் ஒருவரால் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நகை திருட்டு சம்பவம் அய்யனேரி கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு கடந்த இரண்டு நாட்களாக ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வந்தனர். இந்த நிலையில், வெள்ளிக்கிழமை மதியம் கோவில் நிர்வாகத்தினர் ஆய்வு செய்தபோது, அம்மன் சிலையில் இருந்த 10 சவரன் தங்கச் செயின் மாயமானது தெரியவந்தது. மர்ம நபர் யாரோ பக்தர் போல வந்து நகையைத் திருடிச் சென்றது உறுதியானது. இது குறித்து ஆர்.கே.பேட்டை போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடைபெற்றும் நகை கிடைக்கவில்லை.
அருள்வந்த பெண்ணின் செயல் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி உற்சவம் சனிக்கிழமை மாலை நடைபெற்றபோது, கோவில் வளாகத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அப்போது, கோவில் பூசாரியின் மனைவியான மகேஸ்வரிக்குத் திடீரென அருள் வந்து சாமியாடத் தொடங்கினார். சாமியாடியபடியே, “எனது நகை எங்கும் போகவில்லை, இங்குதான் உள்ளது” என்று கூறிய அவர், கோவிலைச் சுற்றி வலம் வந்தார். பின்னர், யாரும் எதிர்பாராத வகையில் கோவிலின் கருவறைக்குள் சென்று விட்டு திரும்பி வந்தபோது, அவரது கையில் திருடுபோனதாகக் கருதப்பட்ட 10 சவரன் தங்கச் செயின் இருந்தது. இதைக்கண்டு அங்கிருந்த பக்தர்கள் அனைவரும் அதிர்ச்சியும் பரவசமும் அடைந்தனர்.
பரபரப்பும் நம்பிக்கையும் அம்மன் நகை மீண்டும் கிடைத்ததால் பக்தர்கள் பெரும் நிம்மதி அடைந்தனர். “திருடிய மர்ம நபர், ஏதோ ஒரு பயத்தில் அல்லது அம்மனின் அருளுக்குப் பயந்து நகையைக் கோவிலுக்குள்ளேயே விட்டுச் சென்றிருக்கலாம்” என்றும், “அந்தப் பெண் எப்படி நகையைக் கண்டுபிடித்தார் என்பது புரியாத புதிராக உள்ளது” என்றும் ஊர்மக்கள் பேசிக்கொள்கின்றனர். எது எப்படியிருப்பினும், திருவிழாக் காலத்தில் நடந்த இந்த சம்பவம் பக்தர்களிடையே மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. நகை கிடைத்த மகிழ்ச்சியில் தீமிதி திருவிழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது.