தமிழகத்தில் நீடித்து வரும் காவிரி, மேகதாது மற்றும் முல்லைப் பெரியாறு போன்ற நதிநீர் பங்கீட்டுப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு காண, தனது கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தியுடன் தமிழக முதல்-அமைச்சர் விஜய் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

அவல நிலை குறித்த கவலை இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகம் பல ஆண்டுகளாக அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் கேரளாவுடன் நீர் தொடர்பான பிரச்சினைகளில் தொடர்ந்து போராடி வருவதாகவும், ஆனால், எந்தவொரு நிரந்தர தீர்வும் கிடைக்காமல் தமிழக விவசாயிகள் பரிதவித்து வருவதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் ஒத்துழைப்பு தற்போது கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய இரு மாநிலங்களிலும் த.வெ.க. கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியே ஆட்சியில் உள்ளது. மேலும், தமிழக அமைச்சரவையிலும் காங்கிரஸ் அமைச்சர்கள் அங்கம் வகிக்கின்றனர். இந்தச் சாதகமான அரசியல் சூழலைப் பயன்படுத்தி, காங்கிரஸ் தலைமை மூலமாக சம்பந்தப்பட்ட மாநில முதல்வர்களின் ஒத்துழைப்பைப் பெற்று, நீண்டகாலமாக நிலுவையில் உள்ள அணை மற்றும் நீர் விவகாரங்களுக்குத் தீர்வுகாண வேண்டும் என்று நயினார் நாகேந்திரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கூட்டணிக் கட்சித் தலைவர்களின் விமர்சனத்திற்கு கண்டனம் மேலும், மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் மோடி மறைமுகமாக அனுமதி வழங்கியதாகத் த.வெ.க.வின் கூட்டணிக் கட்சியான வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பேசி வருவது உண்மைக்குப் புறம்பானது என்றும், இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முதல்வருக்கு விடுக்கப்பட்ட வேண்டுகோள் “கையில் வெண்ணையை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது போன்ற நிலை ஏற்படக்கூடாது” என்று விமர்சித்துள்ள நயினார் நாகேந்திரன், தமிழக மக்களின் நலனையும், விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு, உடனடியாக ராகுல் காந்தியிடம் பேசி, தமிழகத்தின் நீர் உரிமைகளை நிலைநாட்ட முதல்வர் விஜய் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.