இந்திய கிரிக்கெட் அணியின் இளம் தொடக்க வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால், புனேயில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டது கிரிக்கெட் வட்டாரத்தில் கவலைக்குரிய செய்தியாக பரவியுள்ளது. டெஸ்ட் அணியில் தன்னுடைய இடத்தை உறுதிப்படுத்தியுள்ள ஜெய்ஸ்வால், ஒருநாள் மற்றும் டி20 வடிவங்களில் திறமையை நிரூபித்திருந்தாலும், தொடர்ச்சியான வாய்ப்புகள் கிடைக்காமல் போராடி வருகிறார். அண்மையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் சதமடித்து அனைவரையும் கவர்ந்தார்.

அந்த தொடரை முடித்தவுடன், இந்தியாவில் நடைபெற்று வரும் சையத் முஷ்டாக் அலி டி20 தொடரில் மும்பை அணிக்காக களமிறங்கிய அவர், அங்கும் சிறப்பாக விளையாடினார். ஆனால் கடந்த 16ஆம் தேதி மும்பை–ராஜஸ்தான் அணிகள் மோதிய போட்டியில், ஆட்டமிழந்து வெளியேறிய சில நிமிடங்களிலேயே கடுமையான வயிற்று பிடிப்பு மற்றும் வலியால் திடீரென அவதிப்பட்டார்.

உடனடியாக அணியினர் அவரை புனேயில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், ஜெய்ஸ்வாலுக்கு தீவிரமான இரைப்பை–குடல் அழற்சி (severe gastrointestinal inflammation) இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவருக்கு உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது. சில நாட்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்ட பிறகு, தற்போது அவர் நலமடைந்து வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சிகிச்சை முடிந்ததால், ஜெய்ஸ்வால் தனது சொந்த ஊரான மும்பைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளார். இருப்பினும், உடல்நலக்குறைவின் காரணமாக அவர் சுமார் 2 கிலோ எடை இழந்துள்ளதாகவும், முழுமையாக குணமடைய குறைந்தது 10 நாட்கள் ஓய்வு அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த திடீர் உடல்நலக்குறைவு காரணமாக, அவர் அடுத்த சில போட்டிகளில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது. இந்திய அணியின் எதிர்கால திட்டங்களில் முக்கிய பங்கு வகிக்கும் ஜெய்ஸ்வால் விரைவில் குணமடைந்து மீண்டும் களமிறங்குவார் என ரசிகர்கள் நம்பிக்கை வெளியிட்டு வருகின்றனர்.