அமெரிக்காவில் கடந்த 5 ஆண்டுகளில் 62 இந்திய மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு: மத்திய அரசு தகவல்
அமெரிக்காவில் கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் 62 இந்திய மாணவர்களுக்கு குடியேற்ற அதிகாரிகள் அனுமதி மறுத்துள்ளதாக மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மாநிலங்களவையில் எழுத்துப்பூர்வமாகப் பதிலளித்த மத்திய வெளியுறவு இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், பல்வேறு நாடுகளில் அனுமதி மறுக்கப்பட்டு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்ட மாணவர்களின் தகவல்களை வெளியிட்டார்.
முறையான பல்கலைக்கழக அனுமதி ஆவணங்கள் பெறாதது, சேர்க்கை நடைமுறைகளை பூர்த்தி செய்யாதது, அல்லது தேர்ந்தெடுத்த படிப்பு தொடர்பான அடிப்படை கேள்விகளுக்குப் பதிலளிக்கத் தவறியது போன்ற காரணங்களால் மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மேலும், அவர் கூறியதாவது:
“2025 ஜனவரி மாத நிலவரப்படி 153 நாடுகளில் மொத்தம் 18,82,318 இந்திய மாணவர்கள் வெளிநாட்டில் கல்வி பயில்கின்றனர். இதில் அமெரிக்காவில் மட்டும் 2,55,447 மாணவர்கள், பிரிட்டனில் 1,73,190, ஐக்கிய அரபு அமீரகத்தில் 2,53,832 மற்றும் ஆஸ்திரேலியாவில் 1,96,108 இந்திய மாணவர்கள் கல்வி பயில்கின்றனர்.
அதே நேரத்தில், அமெரிக்காவில் கடந்த 5 ஆண்டுகளில் 62 இந்திய மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், இதே காலகட்டத்தில் பிரிட்டனில் இருந்து 170 மாணவர்கள், ஆஸ்திரேலியாவில் இருந்து 114, ரஷியாவில் இருந்து 82, அமெரிக்காவில் இருந்து 45 மற்றும் உக்ரைனில் இருந்து 13 இந்திய மாணவர்கள் நாடு கடத்தப்பட்டு இந்தியாவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.”