ஆண்டுதோறும் இயல்பாக நடைபெற்று வந்த கார்த்திகை தீபத் திருவிழாவின் தீபம் ஏற்றும் நிகழ்வு இந்தாண்டு திருவண்ணாமலையில் சுமூகமாக நடைபெற்றது. ஆனால் திருப்பரங்குன்றத்தில் இது பெரும் சர்ச்சையாக வெடித்து, கடந்த இரண்டு நாட்களாக பதற்றநிலை நிலவுகிறது.
நேற்று, தீபத் தூணியில் தீபம் ஏற்ற அனுமதி வழங்கிய மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவை தமிழக அரசு நிறைவேற்றாத நிலையில், இன்று மீண்டும் அதே உத்தரவை தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வெளியிட்டுள்ளார். இதனால் திருப்பரங்குன்றத்தில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.
இந்த சூழ்நிலையில், திமுக அரசு “கபட நாடகம்” ஆடுகிறது என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடும் குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.
எக்ஸ் தளத்தில் பதிவிட்ட அவர்,
“திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான உயர்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவை அரசு செயல்படுத்தத் தவறியுள்ளது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தேவையற்ற பதற்றத்தை உருவாக்கிய திமுக அரசின் கபட நாடகத்தை கண்டிக்கிறேன்.
‘எம்மதமும் சம்மதம்’ என்ற கொள்கையை மறந்து, எந்த மதத்தையும் சாராத நடுநிலையான ஆட்சியின் பாதையை விட்டு விலகிய ஸ்டாலின் அரசு, தேவையற்ற பிரச்சனையைத் தானே உருவாக்கியுள்ளது. மக்கள் இதற்கு விரைவில் தகுந்த பாடம் புகட்டுவார்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.