வாஷிங்டன்,
அமெரிக்காவின் எரிசக்தி துறையில் இந்தியாவின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மிகப்பெரிய முதலீடு செய்ய இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் தனது ‘ட்ரூத்’ (Truth) சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த திட்டம் அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிரவுன்ஸ்வில் பகுதியில் அமைக்கப்பட உள்ளது.

இந்த திட்டம் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான மிகப்பெரிய முதலீட்டு திட்டமாகும். இந்த திட்டத்தில் முதலீடு செய்யும் இந்தியாவின் ரிலையன்ஸ் நிறுவனத்திற்கு டிரம்ப் தனது நன்றியை தெரிவித்தார். இந்த திட்டம் அமெரிக்காவின் எரிசக்தி உற்பத்தி திறனை மேலும் வலுப்படுத்தும் முக்கியமான முயற்சியாக இருக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவில் அமைக்கப்படும் புதிய எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் தூய்மையான சுத்திகரிப்பு ஆலையாக இருக்கும் என்று டொனால்டு டிரம்ப் தெரிவித்தார். இந்த ஆலை அமெரிக்காவின் ஷேல் எண்ணெய் உற்பத்தியை 100 சதவீதம் சுத்திகரிக்கும் வகையில் வடிவமைக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
சமீப காலமாக மேற்காசிய பகுதியில் நிலவி வரும் அரசியல் பதற்றம் காரணமாக உலகளவில் கச்சா எண்ணெய் விநியோகம் பாதிக்கப்படும் என்ற அச்சம் நிலவுகிறது. குறிப்பாக ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதல்கள் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இந்த சூழ்நிலையில் அமெரிக்காவில் ரிலையன்ஸ் நிறுவனம் முதலீடு செய்வது அந்த நிறுவனத்திற்கு நீண்டகால எரிசக்தி பாதுகாப்பை வழங்கும் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
மேலும் “அமெரிக்கா முதலில், எப்போதும்” என்ற தனது கொள்கைக்கு ஏற்ப, அமெரிக்காவை உலகின் மிகப்பெரிய எரிசக்தி உற்பத்தி நாடாக மாற்றுவது இந்த திட்டத்தின் முக்கிய இலக்காகும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார். இதன் மூலம் அமெரிக்காவில் புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் எரிசக்தி துறையில் நாட்டின் நிலை மேலும் வலுப்பெறும் என்றும் அவர் கூறினார்.
இதற்கிடையில் அமெரிக்க எரிசக்தி தகவல் நிர்வாகம் வெளியிட்ட தகவலின்படி, தற்போது அமெரிக்காவில் மொத்தம் 132 எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் உள்ளன. அவற்றின் மொத்த உற்பத்தி திறன் ஒரு நாளுக்கு சுமார் 18.4 மில்லியன் பீப்பாய்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சுத்திகரிப்பு நிலையங்களில் பலவும் பல ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. அவை பெரும்பாலும் கனமான மற்றும் அதிக அடர்த்தி கொண்ட கச்சா எண்ணெய்களை சுத்திகரிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக வெனிசுலா மற்றும் கனடா போன்ற நாடுகளிலிருந்து வரும் கனமான கச்சா எண்ணெய்களை சுத்திகரிக்க ஏற்றவாறு இந்த ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது அமெரிக்காவில் அதிகமாக உற்பத்தி செய்யப்படும் ஷேல் எண்ணெய் இலகுவான வகையைச் சேர்ந்ததாக இருப்பதால், அதனை சுத்திகரிக்கும் புதிய தொழில்நுட்ப வசதிகள் தேவைப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொள்ளும் இந்த முதலீடு அமெரிக்க எரிசக்தி துறையில் முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
இந்த பிரம்மாண்ட முதலீட்டு திட்டம் சர்வதேச எரிசக்தி சந்தையிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. அமெரிக்கா மற்றும் இந்தியா இடையேயான பொருளாதார ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முயற்சியாகவும் இது பார்க்கப்படுகிறது.