தெஹ்ரான்:
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற அச்சம் அதிகரித்துள்ள பின்னணியில், ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, கடந்த 37 ஆண்டுகளாக தொடர்ந்து பின்பற்றி வந்த ஒரு முக்கிய மரபை இந்த ஆண்டு கைவிட்டுள்ளார். ஆண்டுதோறும் பிப்ரவரி 8-ம் தேதி விமானப் படைத் தளபதிகளுடன் ஆலோசனை நடத்தும் வழக்கத்தை அவர் இந்த முறை பின்பற்றவில்லை. இந்த முடிவு, ஈரான்–அமெரிக்கா இடையே நிலவும் கடும் பதற்றத்தின் பிரதிபலிப்பாகக் கருதப்படுகிறது.

1979-ம் ஆண்டு பிப்ரவரி 8-ம் தேதி, ஈரானில் மன்னராட்சியை வீழ்த்திய புரட்சிக்காலத்தில், விமானப்படை அதிகாரிகள் குழு அயதுல்லா ரூஹோல்லா கோமேனிக்கு விசுவாசமாக இருப்பதாக சத்தியப் பிரமாணம் எடுத்தது. அந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், ஆண்டுதோறும் பிப்ரவரி 8-ம் தேதி ஈரான் உச்ச தலைவர் விமானப் படை அதிகாரிகளுடன் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்துவது ஒரு முக்கிய மரபாக இருந்து வருகிறது. தற்போதைய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, 1989-ம் ஆண்டு பதவியேற்ற பிறகு, இந்த மரபை தவறாமல் கடைப்பிடித்து வந்தார். கரோனா பெருந்தொற்று காலத்தில்கூட இந்த சந்திப்பு ஏதோ ஒரு வடிவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
ஆனால், இந்த ஆண்டு முதன்முறையாக அந்த மரபு கைவிடப்பட்டுள்ளது. அயதுல்லா அலி கமேனிக்குப் பதிலாக, ஈரானின் ஆயுதப் படைகளின் தலைமைத் தளபதி அப்துல் ரஹீம் மவுசவி, பிப்ரவரி 8-ம் தேதி விமானப் படைத் தளபதிகளைச் சந்தித்து உரையாடியுள்ளார். இந்த தகவலை ‘ஈரான் இன்டர்நேஷனல்’ எனும் ஊடகம் வெளியிட்டுள்ளது. உச்சத் தலைவர் நேரடியாக பங்கேற்காதது, ஈரான் அரசியல் மற்றும் பாதுகாப்பு வட்டாரங்களில் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவுகள் சமீப காலமாக கடுமையாக மோசமடைந்துள்ள நிலையில், பாதுகாப்பு காரணங்களால் இந்த சந்திப்பு தவிர்க்கப்பட்டிருக்கலாம் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் அதிகரித்துள்ளதாலும், தேசிய பாதுகாப்பு விவகாரங்களில் அவர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் மீது எந்த தாக்குதல் நடத்தப்பட்டாலும், அது மத்திய கிழக்கு முழுவதும் பெரும் மோதலை ஏற்படுத்தும் என ஈரான் தொடர்ந்து அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது. இருப்பினும், அமெரிக்கா தனது இராணுவ நகர்வுகளை தீவிரப்படுத்தி வருவது கவலையை அதிகரித்துள்ளது. ஈரானில் உள்ள அமெரிக்கர்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக வெளியேற வேண்டும் என அமெரிக்க அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனுடன், யுஎஸ்எஸ் அபிரஹாம் லிங்கன் என்ற விமானம் தாங்கி போர்க்கப்பலை கடந்த மாத இறுதியில் அரபிக் கடலுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளது. மேலும், ஜோர்டானில் உள்ள விமானப் படைத் தளத்துக்கு 12 எஃப்-15 ரக போர் விமானங்கள், ஒரு எம்.க்யூ-9 ஆளில்லா விமானம் மற்றும் தரைத்தாக்குதல் விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் அனைத்தும், ஈரான் மீது அமெரிக்கா எப்போது வேண்டுமானாலும் தாக்குதலை தொடுக்கக்கூடும் என்ற அச்சத்தை அதிகரித்துள்ளன.
இதன் விளைவாக, ஈரானின் உச்ச தலைவர் 37 ஆண்டு காலமாக கடைப்பிடித்து வந்த மரபை கைவிட்டிருப்பது, தற்போதைய சூழ்நிலையின் தீவிரத்தையும், இரு நாடுகளுக்கிடையிலான பதற்றத்தின் உச்சத்தையும் வெளிப்படுத்துவதாக அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.