ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் மேற்கொண்டுள்ள தாக்குதல்களைத் தொடர்ந்து மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்த போர் தற்போது 10-வது நாளாக நீடித்து வருவதால் உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார நிலைமைகளில் தாக்கம் ஏற்பட்டு வருகிறது. ஈரானும் தொடர்ந்து கடுமையான தாக்குதல்களை மேற்கொண்டு வருவதால் வளைகுடா பிராந்தியத்தில் பதற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்த நிலையில், முக்கியமான கடல் போக்குவரத்து பாதையான ஹார்மூஸ் ஜலசந்தியை மூடுவதாக ஈரான் அறிவித்தது. உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கும் இந்த ஜலசந்தி வழியாகவே உலகின் மொத்த எண்ணெய் போக்குவரத்தின் சுமார் ஐந்தில் ஒரு பகுதி நடைபெறுகிறது. எனவே இந்த பாதை மூடப்பட்டிருப்பது சர்வதேச சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
போர் தொடங்கியதிலிருந்து ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக எண்ணெய் கப்பல்களின் போக்குவரத்து பெரும்பாலும் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் இடையூறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமை காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை திடீரென அதிகரித்து வருகிறது.
உலகளாவிய பதற்றங்களுக்கு மத்தியில் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 100 அமெரிக்க டாலரைத் தாண்டியுள்ளது. இந்திய மதிப்பில் இது ரூ.9,200-க்கும் அதிகமாகும். கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு எண்ணெய் விலை உயர்ந்திருப்பது உலக நாடுகளுக்கு கவலைக்குரிய விஷயமாக மாறியுள்ளது.
இன்று காலை ஆசிய சந்தைகளில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை கிட்டத்தட்ட 18 சதவீதம் உயர்ந்து ஒரு பேரலுக்கு 109.25 டாலராக உயர்ந்தது. அதேபோல் நிமெக்ஸ் லைட் ஸ்வீட் கச்சா எண்ணெய் விலையும் 20 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்து 109.37 டாலராக இருந்தது. இந்திய ரூபாய் மதிப்பில் இது சுமார் ரூ.10,000-க்கு மேல் ஆகும்.
ஹார்மூஸ் ஜலசந்தி வழியாக போக்குவரத்து நீண்ட நாட்கள் நிறுத்தப்பட்டால் உலகளாவிய எண்ணெய் சந்தையில் மேலும் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக இந்த மாத இறுதி வரை இந்த பாதை மூடப்பட்டால் கச்சா எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு 150 டாலரைத் தாண்டும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர்கள் கணித்துள்ளனர்.
இதற்கிடையில், ஈரானின் எரிசக்தி கட்டமைப்புகளை இலக்காகக் கொண்டு தாக்குதல் நடத்தியது அமெரிக்கா அல்ல, இஸ்ரேல்தான் என அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த கருத்து சர்வதேச அரசியல் வட்டாரங்களில் மேலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கச்சா எண்ணெய் விலை 100 டாலரைத் தாண்டி விற்பனை செய்யப்பட்டு வருவது உலகளாவிய சந்தைகளில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக உக்ரைன் போர் தொடங்கிய பின்னர் கூட எண்ணெய் விலை இந்த அளவுக்கு உயர்ந்தது இதுவே முதல் முறை என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஈரான்–அமெரிக்கா–இஸ்ரேல் மோதல் மேலும் தீவிரமடைந்தால் உலகளாவிய எண்ணெய் விநியோகம் பெரிதும் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகவும், அதனால் பல நாடுகளில் எரிபொருள் விலைகள் மேலும் உயரக்கூடும் என்றும் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்து வருகின்றனர்.