தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமான ஆண்ட்ரியா, தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார். பல்வேறு கதாபாத்திரங்களில் தன்னை நிரூபித்துள்ள அவர், தனது கெரியரில் முக்கியமான படங்களில் ஒன்றாக கருதப்படுவது வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை. 2018ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தில், அமீரின் மனைவியாக ‘சந்திரா’ என்ற கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா நடித்தார். கணவரை கொன்றவர்களை பழிவாங்கும் நோக்கத்துடன் வாழும் பெண்ணின் மனநிலையை அவர் மிக நுணுக்கமாக வெளிப்படுத்தியிருந்தார். கிடைக்கும் ஒவ்வொரு சூழ்நிலையையும் தன் பக்கம் திருப்பிக் கொள்வது போன்ற காட்சிகளில் ஆண்ட்ரியாவின் நடிப்பு ரசிகர்களாலும் விமர்சகர்களாலும் பாராட்டப்பட்டது.

சமீபத்தில் அவர் நடித்த ‘மாஸ்க்’ படம் நல்ல வரவேற்பைப் பெற்றது. அதேபோல், மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘பிசாசு 2’ படத்திலும் ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல்வேறு வகை படங்களில் தொடர்ந்து நடித்து வருவதால், அவரின் கெரியர் தற்போது நல்ல வேகத்தில் உள்ளது.

இந்நிலையில், வடசென்னை உலகம் மீண்டும் பேசப்படும் சூழல் உருவாகியுள்ளது. வெற்றிமாறன் தற்போது சிம்புவை வைத்து ‘அரசன்’ படத்தை இயக்கி வருகிறார். கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவர் வில்லனாக நடிக்கிறாரா அல்லது வேறு விதமான கதாபாத்திரமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை. ஆனால் படம் குறித்து ரசிகர்களிடையே ஏற்கனவே பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இந்த சூழலில், ஆண்ட்ரியா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வடசென்னை படத்தில் நடித்த ‘சந்திரா’ கதாபாத்திரத்தின் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு அந்த கதாபாத்திரத்தின் ஸ்டில் மீண்டும் வெளியானதால், ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, ‘அரசன்’ படத்திலும் ஆண்ட்ரியா மீண்டும் நடிக்கிறாரா என்ற கேள்வி சமூக வலைதளங்களில் பரவலாக எழுந்துள்ளது. வெற்றிமாறன் உருவாக்கும் வடசென்னை பிரபஞ்சத்தில் அவர் மீண்டும் தோன்றுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வருகிறது.

ஆண்ட்ரியா எந்த விளக்கமும் அளிக்காமல் புகைப்படத்தை மட்டும் பகிர்ந்ததால், இந்த ஊகங்கள் மேலும் வலுப்பெற்றுள்ளன. அரசன் படக்குழுவும் இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் வெளியிடாததால், ரசிகர்கள் தற்போது காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது.