சென்னை:
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடிகர் விஜய் தனது அரசியல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளார். தவெக (தமிழக வெற்றி கழகம்) என்ற பெயரில் கட்சியை தொடங்கியுள்ள விஜய், மாநிலம் முழுவதும் கட்சி அமைப்புகளை வலுப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார். தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் வேட்பாளர் தேர்வு பணிகளையும் அவர் தொடங்கியுள்ளார்.

சமீபத்தில் விஜய் தலைமையிலான தவெக கட்சி, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் எந்த கூட்டணியில் இணையப் போகிறது என்ற விவாதம் அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக அதிமுக தலைமையிலான கூட்டணியில் தவெக இணையலாம் என்ற தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த தகவல்களை தவெக நிர்வாகிகள் மறுத்து, அவை வெறும் வதந்திகள் மட்டுமே என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் நடிகர் விஜய் நேர்காணல் நடத்தும் பணியை இன்று தொடங்கியுள்ளார். தொகுதிவாரியாக விருப்ப மனு அளித்திருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் ஆர்வலர்களை நேரில் சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடியதாக கூறப்படுகிறது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை (ECR) பகுதியில் உள்ள பனையூரில் அமைந்துள்ள தவெக கட்சி அலுவலகத்தில் இந்த நேர்காணல் நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களிடம் தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ளப் போகிறீர்கள், மக்களிடம் கட்சியின் கொள்கைகளை எவ்வாறு கொண்டு செல்லப் போகிறீர்கள் போன்ற கேள்விகளை விஜய் கேட்டறிந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
முதல் கட்டமாக இன்று 60 தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகளை விஜய் சந்தித்து பேசியுள்ளார். இதில் தியாகராயநகர் (டி.நகர்) தொகுதியில் போட்டியிட கட்சியின் பொதுச்செயலாளர் என். ஆனந்த் விருப்ப மனு அளித்திருந்தார். அவரிடம் முதலில் நேர்காணல் நடத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கோபிசெட்டிபாளையம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த ஆதவ் அர்ஜுனா, உசிலம்பட்டி தொகுதிக்கு சி.டி. நிர்மல்குமார், மயிலாப்பூர் தொகுதிக்கு வெங்கட்ராமன் உள்ளிட்ட பலர் நேர்காணலில் கலந்து கொண்டனர்.
மேலும் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்த முன்னாள் எம்.எல்.ஏ. வி.எஸ். பாபு, அம்பத்தூர் தொகுதிக்கு மாவட்ட செயலாளர் பாலமுருகன், ஸ்ரீரங்கம் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் கு.ப. கிருஷ்ணன், வடசென்னை மாவட்ட செயலாளர் வக்கீல் சிவா, கோவை சம்பத், கரூர் மதியழகன், சேலம் பார்த்திபன், கினத்துக்கடவு விக்னேஷ், குன்னம் ரேவதி, சிந்துஜா, புதுக்கோட்டை பர்வேஸ் உள்ளிட்ட பலரும் விஜய்யை சந்தித்து நேர்காணலில் பங்கேற்றனர்.
மேலும் காரைக்குடி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள டாக்டர் பிரபுவும் இந்த நேர்காணலில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. அரசியல் கட்சித் தலைவர் சீமான் போட்டியிடும் என கூறப்படும் காரைக்குடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடும் ஆர்வம் அதிகமாக இருப்பதும் கவனிக்கப்படுகிறது.
இன்றைய நேர்காணலின் அடிப்படையில் முதல் கட்டமாக 60 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை விஜய் தேர்வு செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து மீதமுள்ள தொகுதிகளுக்கும் இதேபோன்று நேர்காணல் நடத்தி 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை தேர்வு செய்ய தவெக திட்டமிட்டுள்ளது.
தவெக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்தவர்களில் பெரும்பாலானவர்கள் அரசியல் துறையில் புதியவர்கள் என கூறப்படுகிறது. விஜய்யின் அரசியல் வருகையால் ஈர்க்கப்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் அதிக அளவில் விருப்ப மனுக்கள் அளித்துள்ளனர்.
அதே சமயம், அதிமுக உள்ளிட்ட பிற கட்சிகளில் இருந்தும் சில முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏக்கள் தாங்கள் முன்பு போட்டியிட்ட தொகுதிகளில் மீண்டும் போட்டியிட வாய்ப்பு கேட்டு தவெகக்கு விருப்ப மனுக்கள் அளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நேர்காணலின் போது கட்சியின் கொள்கைகள் மற்றும் தேர்தல் வாக்குறுதிகளை மக்களிடம் எடுத்துச் செல்ல அனைவரும் முழு உறுதிப்பாட்டுடன் செயல்பட வேண்டும் என்று விஜய் கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் தவெக கட்சி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.