புதுடெல்லி:

இந்தியா–கனடா இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கனடா பிரதமர் மார்க் கார்னி நான்கு நாள் அரசுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். கடந்த 27ஆம் தேதி தனி விமானம் மூலம் மும்பை வந்த அவரை அரசு அதிகாரிகள் வரவேற்றனர். மராட்டிய மாநில தலைநகர் மும்பையில் பல்வேறு தொழிலதிபர்களை சந்தித்து முதலீடு மற்றும் வர்த்தக வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடிய அவர், பின்னர் டெல்லி பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில், டெல்லியில் இன்று நடைபெற்ற சந்திப்பில் நரேந்திர மோடி மற்றும் மார்க் கார்னி இருநாட்டு உறவுகள், பொருளாதார ஒத்துழைப்பு, சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசனை நடத்தினர். இந்த சந்திப்பு இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை புதிய நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் அமைந்ததாக கூறப்படுகிறது.

சந்திப்பைத் தொடர்ந்து இந்தியா மற்றும் கனடா இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. அதன்படி, இந்தியாவின் அணுசக்தி தேவைகளை பூர்த்தி செய்ய கனடா யுரேனியம் வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. இதற்கான உடன்படிக்கை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது. மேலும், இரு நாடுகளுக்கும் இடையே நீண்டநாள் நிலுவையில் இருந்த விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தமான CEPA (Comprehensive Economic Partnership Agreement) தொடர்பான பேச்சுவார்த்தையை விரைவில் முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற இந்தியா–கனடா தலைமை நிர்வாக அதிகாரிகள் கருத்தரங்கில் பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் கூறுகையில், “2030ஆம் ஆண்டுக்குள் இந்தியா–கனடா இருதரப்பு வர்த்தகத்தை 50 பில்லியன் அமெரிக்க டாலர்களாக, அதாவது சுமார் ரூ.4.57 லட்சம் கோடியாக உயர்த்துவதே எங்களின் இலக்கு. அந்த நோக்கில் உறுதியுடன் முன்னேறி வருகிறோம்,” என்றார்.

உலகப் பொருளாதார சூழல் சவாலான நிலையில் இருந்தாலும், இந்தியா மற்றும் கனடாவின் வணிகத் தலைவர்களுக்கிடையேயான நெருக்கமான ஒத்துழைப்பு இருதரப்பு வர்த்தக வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். இந்தியா உலகின் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக உருவெடுத்துள்ளதாகவும், வலுவான உள்நாட்டு சந்தை, விரிவான முதலீட்டு திட்டங்கள் மற்றும் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சி ஆகியவை நாட்டின் முன்னேற்றத்துக்கு ஆதாரமாக உள்ளதாகவும் கூறினார்.

மேலும், 2026–27 மத்திய பட்ஜெட்டில் உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்காக 130 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (சுமார் ரூ.11.9 லட்சம் கோடி) ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். வணிகம் செய்வதை எளிதாக்கும் சீர்திருத்தங்கள் மற்றும் கொள்கை மாற்றங்கள் இந்திய பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக பிரதமர் கூறினார்.

இந்த சந்திப்பு மற்றும் ஒப்பந்தங்கள், இந்தியா–கனடா உறவை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்லும் முக்கியமான படியாகக் கருதப்படுகின்றன. இருநாட்டு வர்த்தக இலக்கை அடைவதற்கான முயற்சிகள் எதிர்காலத்தில் மேலும் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.