‘கேரளா’ மாநிலத்தின் பெயரை என்பதிலிருந்து ‘கேரளம்’ என மாற்றும் மாநில அரசின் தீர்மானத்திற்கு மத்திய அமைச்சரவை தற்போது அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம், மாநிலத்தின் பெயர் அனைத்து மொழிகளிலும் ஒரே வடிவில் குறிப்பிடப்படும் வகையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.

பினராயி விஜயன் தலைமையிலான கேரள சட்டப்பேரவையில், பெயர் மாற்றத்திற்கான தீர்மானம் கடந்த 2024 ஆம் ஆண்டு இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்டது. மலையாள மொழியில் மாநிலத்தின் பெயர் எப்போதும் ‘കേരളം’ (கேரளம்) எனவே இருந்தது. ஆனால், ஆங்கிலத்தில் மற்றும் இந்திய அரசியலமைப்பில் ‘Kerala’ என குறிப்பிடப்பட்டிருந்தது. இதை ஒரே மாதிரியாக்கும் நோக்கில், மாநில அரசு இந்த மாற்றத் தீர்மானத்தை எடுத்தது.
இன்று பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, அந்த தீர்மானத்துக்கு உத்தியோகபூர்வ அனுமதி வழங்கியுள்ளது. இதனையடுத்து, அரசியலமைப்பின் பிரிவு 3 இன் கீழ் பெயர் மாற்றம் தொடர்பான மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற அங்கீகாரம் மற்றும் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தவுடன் புதிய பெயர் நடைமுறைக்கு வரும்.
இந்த முடிவைத் தொடர்ந்து, பிரதமர் நரேந்திர மோடி மலையாளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:
“பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, கேரளா மாநிலத்தின் பெயரை ‘கேரளம்’ என மாற்ற முடிவு செய்துள்ளது. இது கேரள மக்களின் விருப்பத்தையும், நமது மாபெரும் கலாச்சார மரபுகளுடனான பிணைப்பையும் பிரதிபலிக்கிறது. இது நமது பண்பாட்டுச் செல்வத்தை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு முக்கிய கட்டமாகும்,” என பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசின் இந்த தீர்மானம், மாநில மக்களிடையே பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது. சமூக ஊடகங்களில் பலர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மொழி, கலாச்சாரம் மற்றும் அடையாளம் ஆகியவற்றை ஒரே வடிவில் ஒருங்கிணைக்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க முடிவாக இது பாராட்டப்படுகிறது.