சென்னை:

இந்திய கடற்படையில் புதிய போர்க்கப்பலான INS Arnala இன்று அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் இந்திய கடற்படை தளபதி Dinesh K Tripathi கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசியதாவது: “ஐ.என்.எஸ். அன்ஜாதிப் (அர்னாலா) கப்பல் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் உருவாக்கப்பட்டுள்ளது. ஆழமற்ற நீர் பகுதிகளில் செயல்படும் மேம்பட்ட சோனார் அமைப்புகள், இலகுரக டார்பிடோக்கள், நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு ராக்கெட்டுகள் மற்றும் நவீன போர் மேலாண்மை அமைப்பு ஆகியவை இதில் பொருத்தப்பட்டுள்ளன. இந்தக் கப்பல் நமது கடற்படையின் கடலுக்கடியில் நடைபெறும் போர் திறனை குறிப்பிடத்தக்க வகையில் உயர்த்தும்.”

இந்த கப்பல் ‘தற்சார்பு இந்தியா’ முயற்சியின் ஒரு பகுதியாக நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு கட்டப்பட்டது என அவர் பெருமையுடன் குறிப்பிட்டார். தெற்கில் உள்ள லார்சன் & டப்ரோ காட்டுப்பள்ளி கப்பல் கட்டும் தளத்தில் இந்தக் கப்பல் கட்டப்பட்டது. கிழக்கில் உள்ள கொல்கத்தாவைச் சேர்ந்த பொறியாளர்கள் இதில் முக்கிய பங்காற்றினர். வடக்கில் காசியாபாத்தில் வடிவமைக்கப்பட்ட போர் மேலாண்மை அமைப்பும் இதில் பொருத்தப்பட்டுள்ளது. மேற்கில் அமைந்துள்ள அன்ஜாதிப் தீவின் பெயரே இந்தக் கப்பலுக்கு சூட்டப்பட்டுள்ளது.

நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு திறனை மேம்படுத்துவதில் இந்திய கடற்படை தொடர்ந்து கவனம் செலுத்தி வருவதாக தளபதி தெரிவித்தார். கடல்சார் பாதுகாப்பு சூழல் நாளுக்கு நாள் சவாலாக மாறிவரும் நிலையில், நவீன ஆயுதங்கள் மற்றும் கண்காணிப்பு அமைப்புகள் அவசியம் எனவும் அவர் கூறினார்.

2025 ஆம் ஆண்டில் இந்திய கடற்படையில் 12 போர்க்கப்பல்களும் ஒரு நீர்மூழ்கிக் கப்பலும் இணைக்கப்பட்டதாகவும், 2026 ஆம் ஆண்டில் மேலும் 15 கப்பல்களை இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 2047 ஆம் ஆண்டுக்குள் கப்பல் கட்டுமானத்தில் முழுமையான தன்னிறைவை அடைந்து, முழுமையான தற்சார்பு இந்திய கடற்படையாக பரிணமிப்பதே நீண்டகால இலக்கு என அவர் விளக்கினார்.

மேலும், 2035 ஆம் ஆண்டுக்குள் இந்திய கடற்படையை 200-க்கும் மேற்பட்ட கப்பல்களைக் கொண்ட வலுவான கடல்சார் படையாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். இந்திய பெருங்கடல் பகுதியைத் தாண்டியும், இந்திய கடற்படையின் செயல்பாட்டு தடம் விரிவடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்ச்சி, இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு திறனை வலுப்படுத்தும் முக்கியமான கட்டமாகக் கருதப்படுகிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் கடல்சார் ஆளுமையை உறுதி செய்யும் நோக்கில் இந்திய கடற்படை தொடர்ந்து முன்னேறி வருவதாக தளபதி தினேஷ் திரிபாதி தெரிவித்தார்.