சென்னை:
ஜனநாயகன் திரைப்படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க உத்தரவிட்ட தனி நீதிபதியின் உத்தரவை, Madras High Court ரத்து செய்து முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி அமர்வு, தணிக்கை வாரியத்தின் வாதங்களை கேட்காமல் உத்தரவிட்டது சரியான நடைமுறை அல்ல எனக் குறிப்பிட்டுள்ளது.
நடிகரும், த.வெ.க. தலைவருமான Vijay நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை, கே.வி.என். புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் கோரி விண்ணப்பிக்கப்பட்ட நிலையில், படத்தை பார்வையிட்ட தணிக்கை வாரிய குழு, மதம் மற்றும் பாதுகாப்புப் படைகள் தொடர்பான சில காட்சிகள் இடம் பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டு, மறுஆய்வு (ரிவ்யூ) குழுவுக்கு அனுப்ப பரிந்துரை செய்தது.
இதனை எதிர்த்து, தயாரிப்பு நிறுவனம் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி பி.டி.ஆஷா, தணிக்கை வாரியம் மறுஆய்வு குழுவுக்கு அனுப்பிய நடவடிக்கை செல்லாது என்றும், ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, தணிக்கை வாரியம் உடனடியாக மேல்முறையீடு செய்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை பெற்றது. இதையடுத்து, தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவத்சவா மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய முதல் பெஞ்ச் இந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்து தீர்ப்பை ஒதுக்கி வைத்திருந்தது.
இந்நிலையில், இன்று தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள், தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை முழுமையாக ரத்து செய்தனர். தணிக்கை வாரியத்தின் வாதங்களை கேட்காமல், உரிய அவகாசம் வழங்காமல் உத்தரவிடப்பட்டதாகக் கூறிய வாதம் ஏற்கப்பட்டது.
தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்ததாவது, ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு எதிராக தீவிரமான புகார்கள் உள்ளன. ஒரு திரைப்படத்திற்கு எந்த வகையான தணிக்கை சான்றிதழ் வழங்குவது என்பது தணிக்கை அதிகாரியின் அதிகார வரம்புக்குள் வரும் முடிவாகும். படத்தில், வெளிநாட்டு சக்திகள் இந்தியாவில் மதவாத மோதலைத் தூண்டும் எனும் வகையிலான வசனங்கள் இடம்பெற்றுள்ளதாகவும், மத அடையாளங்களை அவமதிப்பதை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
மேலும், பாதுகாப்புப் படை சின்னங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதால், அந்த காட்சிகள் நிபுணர் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டதாக தணிக்கை வாரியம் விளக்கம் அளித்துள்ளது. இதனை முழுமையாக பரிசீலிக்காமல் உத்தரவிட்டது நடைமுறை தவறு எனக் கூறி, வழக்கை மீண்டும் தனி நீதிபதி பி.டி.ஆஷா முன் புதிய விசாரணைக்காக மாற்றி உத்தரவிட்டனர்.
இதனால், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு மேலும் தாமதமாகும் சூழல் உருவாகியுள்ளது. இதேவேளை, சென்னை ஐகோர்ட்டின் இந்த தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தை அணுகுவது குறித்து தயாரிப்பு நிறுவனம் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.