சென்னை:

அஜித் நடிப்பில் கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றியை பெற்ற ‘மங்காத்தா’ திரைப்படம் சமீபத்தில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட நிலையில், அந்த படம் உருவாக்கிய பெரும் ரசிகர் கூட்டம் காரணமாக தனது புதிய படமான ‘திரௌபதி 2’ திரைப்படத்தின் வசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் மோகன் ஜி வேதனையுடன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

‘மங்காத்தா’ திரைப்படம் நேற்று மீண்டும் திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. அஜித், திரிஷா, அர்ஜூன் உள்ளிட்டோர் நடித்த இந்த படம், வெளியான காலத்திலேயே ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது. தற்போது ரீ-ரிலீஸிலும் அதே அளவிலான வரவேற்பு கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. முதல் நாளிலேயே ரூ.5 கோடியை தாண்டி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால், ரீ-ரிலீஸ் படங்களின் வசூல் சாதனைகளை ‘மங்காத்தா’ முறியடித்து வருவதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், அதே நாளில் வெளியான ‘திரௌபதி 2’ திரைப்படம், ‘மங்காத்தா’ அலையின் காரணமாக ரசிகர்களின் கவனத்தை பெற முடியாமல் போனதாக கூறப்படுகிறது. திரையரங்குகளில் பெரும்பாலான கூட்டம் ‘மங்காத்தா’ படத்துக்கே திரண்டதால், ‘திரௌபதி 2’ படத்திற்கு எதிர்பார்த்த அளவில் பார்வையாளர்கள் வரவில்லை. இதன் காரணமாக, படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து இயக்குநர் மோகன் ஜி வெளியிட்டுள்ள வீடியோவில், தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் பேசும்போது, “‘திரௌபதி 2’ திரைப்படத்திற்கு மக்களிடையே நல்ல கருத்து இருந்தாலும், ‘மங்காத்தா’ போன்ற ஒரு பெரிய படத்தின் ரீ-ரிலீஸ் காரணமாக எங்கள் படம் முன் நிற்க முடியாமல் போய்விட்டது. பொங்கல் பண்டிகை காலத்தில் திரையரங்குகள் கிடைக்காததால், படத்தை அடுத்த வாரம் தள்ளி வெளியிட்டது மிகப்பெரிய தவறாகி விட்டது” என கூறினார்.

மேலும், “திரைப்படம் ஜனவரி 23-ஆம் தேதி வெளியாகிறது என்ற தகவலை மக்களிடம் சரியாக கொண்டு சேர்க்க முடியவில்லை. ‘மங்காத்தா’ படத்திற்கு வந்த பெரும் கூட்டத்தால், எங்கள் படத்தின் ஆடியன்ஸ் கருத்துகளை கூட பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. வரலாற்றில் மறைக்கப்பட்ட சில உண்மைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கவே இந்த படத்தை எடுத்தோம். ஆனால் அந்த வாய்ப்பு முழுமையாக கிடைக்கவில்லை” என வேதனை தெரிவித்தார்.

இந்த சூழலை பயன்படுத்தி, சிலர் படம் பார்க்காமலேயே தவறான விமர்சனங்களை பரப்பி வருவதாகவும், தனது மீது தப்பான கருத்துகளை பதிவிட்டு வருவதாகவும் மோகன் ஜி குற்றம் சாட்டினார். “திரைப்படத் துறையில் எந்த பெரிய ஆதரவுமின்றி, தனியாகவே கடந்த 10 ஆண்டுகளாக பயணித்து வருகிறேன். மக்களின் தீர்ப்பே இறுதியான தீர்ப்பு. எனக்கு மக்களே துணை; மக்களே முடிவு செய்யட்டும்” என்றும் அவர் உருக்கமாக கூறினார்.

மோகன் ஜியின் இந்த வீடியோ வெளியானதை தொடர்ந்து, சமூக வலைதளங்களில் ஆதரவும், விமர்சனங்களும் கலந்த கருத்துகள் வெளியாகி வருகின்றன. ஒரு பக்கம் ‘மங்காத்தா’ ரீ-ரிலீஸ் கொண்டாட்டத்தில் ரசிகர்கள் உற்சாகமாக இருக்கும் நிலையில், மறுபக்கம் ‘திரௌபதி 2’ படக்குழுவின் வேதனை திரையுலகில் விவாதத்துக்குரியதாக மாறியுள்ளது.