வாஷிங்டன் டி.சி.,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் (79) பதவியேற்றதிலிருந்து பல்வேறு அதிரடி நடவடிக்கைகளால் உலக அரசியல் அரங்கில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வருகிறார். சமீப மாதங்களில், அவரது உடல்நிலை குறித்து பல்வேறு ஊகங்கள் சமூக ஊடகங்களில் பரவியிருந்தன. அவர் முன்பு போல் செயல்பட முடியவில்லை என்ற தகவல்களும் வெளியான நிலையில், அவை அனைத்தும் தவறானவை என டிரம்ப் மறுத்து, செய்தி நிறுவனங்கள் உண்மையற்ற தகவல்களை பரப்புகின்றன என குற்றம்சாட்டினார்.

இந்நிலையில், டிரம்பின் வலது கையின் மேல்பகுதியில் பேண்டேஜ் போடப்பட்டிருப்பது கவனத்தை ஈர்த்தது. இளஞ்சிவப்பு நிறத்தில் இருந்த அந்த பேண்டேஜ், அவரது கையில் ஏற்பட்ட காயம் அல்லது சிராய்ப்பு குறித்து புதிய கேள்விகளை எழுப்பியது. பல வாரங்களாக அவரது உடல்நிலை குறித்து பரவியிருந்த யூகங்களுக்கு இது மேலும் தீனி போட்டது. டிரம்ப், பேண்டேஜ் வெளிப்படையாக தெரியாமல் இருக்க, தனது தோல் நிறத்துடன் ஒத்துப்போகும் வகையில் மேக்-அப் பயன்படுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின. எனினும், சமூக ஊடக பயனாளர்கள் மற்றும் அரசியல் விமர்சகர்கள், அவரது கையில் இருந்த பேண்டேஜை தெளிவாக காட்டும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்த விவகாரம் குறித்து வெள்ளை மாளிகை ஊடக செயலாளர் கரோலின் லீவிட் செய்தியாளர்களிடம் விளக்கம் அளித்தார். இதில் கவலைப்பட வேண்டிய எதுவும் இல்லை என அவர் கூறினார். டிரம்பின் வேலைப்பளு மிக அதிகமாக இருப்பதாலும், தினசரி பல்வேறு விருந்தினர்களை சந்தித்து கைகுலுக்குவதாலும், இத்தகைய சிராய்ப்புகள் ஏற்படுவது சாதாரணமே என அவர் விளக்கினார்.

அவர் மேலும், “உங்களுக்கு தெரியாமல் இருக்கலாம், டிரம்ப் தினமும் நூற்றுக்கணக்கான பேரை சந்திக்கிறார். அவர்களுடன் கைகுலுக்குவது அவரது தினசரி பணியின் ஒரு பகுதியாகும். இதனால் கையில் சிராய்ப்புகள் ஏற்படுவது இயல்பானது. மேலும், அவர் தினசரி சிறிதளவு ஆஸ்பிரின் மருந்து எடுத்துவருகிறார். அந்த மருந்தின் தன்மையாலும் இத்தகைய அடையாளங்கள் தோன்றியிருக்கலாம்” என்று கூறினார்.

டிரம்பின் கையில் இருந்த பேண்டேஜ் குறித்து சமூக ஊடகங்களில் எழுந்த பரபரப்பை அடக்குவதற்காக வெள்ளை மாளிகை எடுத்த இந்த விளக்கம், அவரது உடல்நிலை குறித்து பரவும் ஊகங்களுக்கு ஒரு பதிலாகக் கருதப்படுகிறது. இருப்பினும், டிரம்பின் ஒவ்வொரு பொதுவான தோற்றமும், அவரது உடல்நிலை குறித்து புதிய விவாதங்களை கிளப்பி வருவது குறிப்பிடத்தக்கது.