தமிழ்நாட்டில் விரைவில் HPV தடுப்பூசி திட்டம் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில் உலக எய்ட்ஸ் தினம் 2025 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு உறுதிமொழி ஏற்றதோடு, விழிப்புணர்வு பதாகைகள், குறும்படம், கையெழுத்து இயக்கம் ஆகியவற்றை தொடங்கி வைத்தார். மேலும் எச்ஐவி/எய்ட்ஸ் தடுப்பு பணியில் சிறந்து விளங்கிய மருத்துவர்கள், தன்னார்வலர்கள், சிகிச்சை மையங்களுக்கு விருதுகள் வழங்கினார்.
அமைச்சர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 1 எய்ட்ஸ் தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள் “இடையூறுகளைக் கடந்து எச்ஐவி/எய்ட்ஸ் எதிர்வினைகளை மாற்றுதல்” எனும் தலைப்பில் நடைபெற்றது. 2030க்குள் தமிழ்நாட்டில் எச்ஐவி/எய்ட்ஸ் பாதிப்பு இல்லாத நிலையை எட்டும் நோக்கில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்தியாவில் எச்ஐவி பாதிப்பு 0.23% ஆக இருந்தாலும், தமிழ்நாட்டில் அது 0.16% மட்டுமே உள்ளது. மாநிலம் முழுவதும் 2600 நம்பிக்கை மையங்கள், 81 கூட்டு சிகிச்சை மையங்கள், 172 இணை சிகிச்சை மையங்கள் செயல்படுகின்றன. கருவுற்ற தாய்மார்களுக்கு 100% எச்ஐவி மற்றும் சிபிலிஸ் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. பாதிக்கப்பட்ட தாய்மார்களிடமிருந்து பிறக்கும் குழந்தைகளுக்கு Nevirapine அல்லது Zidovudine போன்ற தடுப்பு மருந்துகள் வழங்கப்படுகின்றன.
2009இல் தொடங்கப்பட்ட கலைஞர் எய்ட்ஸ் அறக்கட்டளை நிதி தற்போது ரூ.29 கோடியாக உயர்ந்துள்ளது. கடந்த ஆறு மாதங்களாக 7,618 குழந்தைகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. மேலும் 584 கல்லூரிகளில் 14,878 மாணவர்கள் இணையவழி வினாடி வினா போட்டிகளில் பங்கேற்றுள்ளனர்.
அமைச்சர் சமூக வலைத்தளங்களில் பரவிய பீகார் மாநில சம்பவத்தை எடுத்துக்காட்டினார். அங்கு ஆன்மீக நிகழ்ச்சியில் ஒரே கத்தியைப் பயன்படுத்தி பலரின் நெற்றியில் கீரலை போடுவதால் 7,500 பேர் எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டதாக கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்ற செயல்கள் தமிழ்நாட்டில் நடைபெறாமல் தடுக்கும் வகையில் கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, 10க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டுள்ளன.
HPV தடுப்பூசி திட்டம் தொடர்பாக அமைச்சர் கூறியதாவது: 9–14 வயது பெண் குழந்தைகளுக்கு கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பு தடுப்பூசி இலவசமாக வழங்கும் திட்டம் விரைவில் தொடங்கப்படுகிறது. ரூ.36 கோடி செலவில், முதற்கட்டமாக அரியலூர், பெரம்பலூர், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்டங்களில் 27,000 குழந்தைகள் பயன்பெற உள்ளனர். மொத்தம் 3.38 லட்சம் குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பலன் பெறுவார்கள். தனியார் மருத்துவமனைகளில் ஒரு தடுப்பூசி ரூ.2,000 வரை செலவாகும் நிலையில், தமிழ்நாடு அரசு இதனை இலவசமாக வழங்குகிறது.
இந்த திட்டத்தை விரைவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். மத்திய அரசும் இதனை நாடு முழுவதும் செயல்படுத்தினால், அனைத்து பெண் குழந்தைகளும் பலன் பெறுவார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.