மெரினா கடற்கரையில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி அஞ்சலி செலுத்தினார்.
“மக்களால் நான்… மக்களுக்காக நான்” என்ற உறுதியான குரலால் மக்கள் மனதில் இடம்பிடித்தவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. 2016 செப்டம்பர் 22-ஆம் தேதி உடல்நலக் குறைவு காரணமாக அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 70 நாட்கள் நீடித்த தீவிர சிகிச்சைக்கும் பலனளிக்காமல், 2016 டிசம்பர் 5-ஆம் தேதி உயிரிழந்தார்.
அவர் மறைந்து 9 ஆண்டுகள் ஆனாலும், அ.தி.மு.க. தொண்டர்கள் அவரை என்றும் நினைவுகூர்ந்து வருகின்றனர்.
ஜெயலலிதாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சென்னை மெரினா கடற்கரையில் உள்ள நினைவிடத்துக்கு சென்றார். அங்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அவருடன் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, வைகைச் செல்வன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர். மேலும் பல அதிமுக தொண்டர்கள் கண்ணீருடன் ஜெயலலிதாவை நினைவுகூர்ந்தனர்.