தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசு செய்த மேல்முறையீட்டு மனுவை ஐகோர்ட்டு மதுரை கிளை தள்ளுபடி செய்திருந்தது.
உச்சிப்பிள்ளையார் கோயில் பகுதியில் தீபம் ஏற்றப்பட்ட நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் இந்த ஆண்டும் கார்த்திகை தீபம் ஏற்றப்பட வேண்டும் என உத்தரவிட்டார். ஆனால் அந்த உத்தரவு அன்று நிறைவேற்றப்படவில்லை. தீபம் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே மட்டுமே ஏற்றப்பட்டது.
இதையடுத்து அதே நீதிபதியிடம் உடனடியாக முறையீடு செய்யப்பட்டது. மனுதாரர் ராம. ரவிக்குமார் உள்ளிட்டோர் மத்தியப் படை பாதுகாப்புடன் சென்று தீபம் ஏற்ற அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் போலீசார் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல யாருக்கும் அனுமதி வழங்காததால் அந்த உத்தரவும் அமலாகவில்லை.
பின்னர் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என மதுரை டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதனை அவசர விசாரணையாக எடுத்த நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் கே.கே. ராமகிருஷ்ணன் தள்ளுபடி செய்தனர்.
இதையடுத்து தனது உத்தரவு ஏன் நிறைவேற்றப்படவில்லை என விளக்கம் கேட்க நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் நேற்று மாலை மீண்டும் வழக்கை எடுத்தார். தமிழக அரசின் சார்பில் மூத்த வக்கீல் ஜோதி ஆஜராகி, இந்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தெரிவித்தார். எனவே அதுவரை நேரம் வழங்க வேண்டும் எனக் கேட்டார்.
அதற்கு நீதிபதி, கோவில் செயல் அலுவலர் காணொலியில் ஆஜராக வேண்டும் என முன்பே உத்தரவிட்டதாகவும், ஆனால் அவர் இதுவரை பதில் அளிக்கவில்லை எனவும் அதிருப்தி தெரிவித்தார். மேலும் மதுரை மாநகர காவல் கமிஷனர் லோகநாதன் உத்தரவை செயல்படுத்தவில்லை எனக் கூறி, அவர் காணொலியில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.
சற்று நேரத்தில் கமிஷனர் காணொலியில் ஆஜராகினார். நீதிபதி, “மனுதாரர் உள்ளிட்ட 10 பேரை மத்திய பாதுகாப்புடன் மலை உச்சிக்கு அனுப்பி தீபம் ஏற்றச் சொல்லியிருந்தேன்; ஆனால் அனுமதிக்காமல் தடுத்தது ஏன்?” என்று கேட்டார்.
அதற்கு கமிஷனர், “பகலில் பாதுகாப்பு பணிகள் நடைபெற்றன. மேலும் மதுரை கலெக்டரிடமிருந்து 144 தடை உத்தரவு அமல்படுத்தும் அறிவிப்பு வந்தது. சட்டம்–ஒழுங்கு பிரச்சனை தவிர்க்கவே யாரையும் மலைக்கு செல்ல அனுமதிக்கவில்லை” என பதிலளித்தார்.
இதையடுத்து நீதிபதி, கலெக்டர் அமல்படுத்திய 144 தடை உத்தரவை ரத்து செய்து, இரவு 7 மணிக்குள் மனுதாரர் ராம. ரவிக்குமார் உள்ளிட்ட 10 பேர் மலை உச்சியில் உள்ள தீபத் தூணில் தீபம் ஏற்ற தேவையான ஏற்பாடுகளை காவல் கமிஷனர் செய்திட வேண்டும் என உத்தரவிட்டார். தீபம் ஏற்றப்பட்ட பின், அதுகுறித்த அறிக்கையை கமிஷனர் இன்று நேரில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கூறினார்.
இந்நிலையில், 2-வது நாளாகவும் மலை உச்சிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், நயினார் நாகேந்திரன் உட்பட 500 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதற்கிடையில் மதுரை கலெக்டர் பிரவீன்குமார் சார்பில், மதுரை கிளை உத்தரவை ரத்து செய்ய கோரி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
கோர்ட்டு அவமதிப்பு வழக்கின் விசாரணை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் முன்னிலையில் நடைபெற்றது. கலெக்டர் மற்றும் காவல் கமிஷனர் நேரில் ஆஜராகாத நிலையில், உத்தரவு நிறைவேற்றப்படவில்லை என மனுதாரர் தரப்பு குற்றம் சாட்டியது. இதற்கு அரசுத் தரப்பு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தது.
ஒரே விவகாரத்தில் 3 உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டும் அவை நிறைவேற்றப்படவில்லை என நீதிபதி அதிருப்தி தெரிவித்தார். CISF படையினர் நேரில் சென்று நிலவர அறிக்கையை தாக்கல் செய்யவும், தமிழக அரசு ஏன் உத்தரவை செயல்படுத்தவில்லை என அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டார்.
இந்நிலையில், திருப்பரங்குன்றம் மலைத் தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான வழக்கின் விசாரணை டிசம்பர் 9-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளதனால், தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று ஐகோர்ட்டு மதுரை கிளை வழக்கை ஒத்திவைத்தது.