
சென்னையில் விநாயகர் சிலைகளை கடலில் கரைப்பது தொடர்பாக முக்கிய மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரை கடற்கரை பகுதிகளில் அடுத்த ஆண்டு முதல் விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதி வழங்கப்படாது என்று தமிழக அரசு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு சென்னையில் விநாயகர் சிலைகளை கரைக்க பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் மற்றும் திருவொற்றியூர் உள்ளிட்ட நான்கு கடற்கரை பகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதற்காக 17 பிரத்யேக வழித்தடங்களும், சுமார் 15,000 போலீசார் பாதுகாப்புப் பணிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆனால் சுற்றுச்சூழல் முக்கியத்துவம் வாய்ந்த கடற்கரை பகுதிகளில் சிலைகளை கரைப்பதை கட்டுப்படுத்த வேண்டும் என்ற வழக்கை விசாரித்த தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம், நீர்நிலைகளில் விநாயகர் சிலை கரைப்பது தொடர்பாக தமிழக அரசு இன்று பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
இதன் பின்னணியில், அடுத்தாண்டு முதல் பட்டினப்பாக்கம் மற்றும் நீலாங்கரைக்கு மாற்றாக வேறு immersion points தேர்வு செய்யப்படலாம். அந்த மாற்று இடங்கள் குறித்த முழுமையான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.