புதுச்சேரி,

கேரளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய மூன்று மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்து வருகிறது. வருகிற 9-ந் தேதி நடைபெறவுள்ள தேர்தலுக்காக கடந்த 16-ந் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. அதன்பிறகு அரசியல் கட்சிகள் தங்களது வேட்பாளர்களை அறிவித்து, பரபரப்பான அரசியல் சூழலில் வேட்புமனு தாக்கல் பணிகள் தொடர்ந்து நடைபெற்றன. இந்த செயல்முறை நேற்று நிறைவடைந்தது.

புதுச்சேரியில் 30 உறுப்பினர் கொண்ட சட்டசபைக்கான தேர்தலில் ஆரம்ப நாட்களில் வேட்புமனு தாக்கல் மெதுவாக இருந்தது. முதல் இரண்டு நாட்களில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. பின்னர் 18-ந் தேதி அமாவாசை நாளில் கூட கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையிலும், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் சேர்த்து 12 பேர் மனு தாக்கல் செய்தனர். இறுதி நாளில் அதிகளவில் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. குறிப்பாக காங்கிரஸ் மற்றும் திமுக இடையே தொகுதி பங்கீடு இறுதி செய்யப்படாத காரணத்தால், இரு தரப்பினரும் அனைத்து 30 தொகுதிகளிலும் வேட்புமனு தாக்கல் செய்தனர். மொத்தமாக புதுச்சேரியில் 444 வேட்பாளர்கள் 514 மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கேரள மாநிலத்தில் 140 தொகுதிகளுக்கான தேர்தலில் மும்முனை போட்டி நிலவுகிறது. ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமையிலான அணியும், காங்கிரஸ் தலைமையிலான அணியும், பாரதிய ஜனதா கட்சியும் முக்கிய போட்டியாளர்களாக களமிறங்கியுள்ளன. மொத்தமாக 2,039 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர். கடைசி நாளில் முக்கிய தலைவர்களும் மனுதாக்கல் செய்தனர். எதிர்க்கட்சித் தலைவர் வி.டி. சதீஷன் பரவூர் தொகுதியில் மனு தாக்கல் செய்தார். இதற்கு முன்பு முதலமைச்சர் பினராயி விஜயன் தர்மடம் தொகுதியிலும், மாநில பாரதிய ஜனதா தலைவர் ராஜீவ் சந்திரசேகர் நேமம் தொகுதியிலும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

அசாம் மாநிலத்தில் 126 தொகுதிகளுக்கான தேர்தலிலும் வேட்புமனு தாக்கல் பரபரப்பாக நடைபெற்றது. தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆகியவை முக்கிய போட்டியாளர்களாக இருக்கின்றன. அதேசமயம், பிற கட்சிகளும் தனித்தனி போட்டியில் களமிறங்கியுள்ளன. அங்கு மொத்தமாக 818 வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்நிலையில், இந்த மூன்று மாநிலங்களிலும் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களின் பரிசீலனை இன்று நடைபெறுகிறது. மனுக்களை வாபஸ் பெற நாளை மறுநாள் கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேட்புமனு தாக்கல் நிறைவடைந்துள்ளதால், இப்போது தேர்தல் பிரசாரம் முழு வேகத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசியல் கட்சிகள் வாக்காளர்களை ஈர்க்க தீவிரமாக களமிறங்க உள்ளதால், அடுத்த சில நாட்களில் தேர்தல் சூழல் மேலும் பரபரப்பாக மாறும் என்று கூறப்படுகிறது.