புதுடெல்லி

இந்தியாவில் மிகப்பெரிய அளவில் கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகை, உலகளாவிய அங்கீகாரம் பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு முக்கிய அங்கமாக விளங்கும் யுனெஸ்கோ, உலகின் பல்வேறு நாடுகளின் பாரம்பரிய கலாச்சாரங்கள் மற்றும் மரபுகளை ஆய்வு செய்து, அவற்றை “மனித குலத்தின் மறையாத கலாசார பாரம்பரியப் பட்டியலில்” (UNESCO List of Intangible Cultural Heritage of Humanity) சேர்த்து வருகிறது. பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அமைந்துள்ள யுனெஸ்கோ தலைமையகம், உலகின் பல்வேறு நாடுகளின் கலாச்சார அடையாளங்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

இந்தப் பட்டியலில், இந்தியாவின் முக்கியமான பாரம்பரியங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. இப்போது, இந்துக்களின் தீபாவளி பண்டிகையும் அந்தப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளதாக மத்திய கலாசாரத்துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் அறிவித்துள்ளார். இதனால், இந்தியாவுக்கு ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் அமைந்துள்ளது.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான காலத்தில், இந்தியாவின் கலாச்சார பாரம்பரியங்களுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்து வருகிறது. தீபாவளி பண்டிகை, நம்பிக்கை, நல்லிணக்கம், சமத்துவம் போன்ற உயர்ந்த மதிப்புகளை உலகளவில் எடுத்துச் செல்லும் ஒரு முக்கியமான விழா. யுனெஸ்கோவின் பட்டியலில் தீபாவளி சேர்க்கப்படுவது, இந்தியாவின் கலாச்சார அடையாளத்தை மேலும் வலுப்படுத்தும் ஒரு மைல்கல்லாகும்” எனக் கூறியுள்ளார்.

தீபாவளி, இந்தியர்களின் வாழ்வியலுடன் ஆழமாக பிணைந்திருக்கும் பண்டிகை. வெளிச்சம் இருளை வெல்வதை குறிக்கும் இந்த விழா, நீதியும் உண்மையும் எப்போதும் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையை மக்களிடையே விதைக்கிறது. குடும்ப உறவுகள், சமூக நல்லிணக்கம், ஆன்மீக நம்பிக்கை ஆகியவற்றை வலுப்படுத்தும் தீபாவளி, இப்போது உலகளாவிய பாரம்பரிய அங்கீகாரம் பெற்றிருப்பது, இந்தியர்களுக்கு பெருமை சேர்க்கும் நிகழ்வாகும்.

பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில், “இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். தீபாவளி நமது நாகரிகத்தின் ஆன்மா. இது வெளிச்சத்தையும், நீதியையும் வெளிப்படுத்துகிறது. யுனெஸ்கோவின் பாரம்பரியப் பட்டியலில் தீபாவளி சேர்க்கப்படுவது, இத்திருவிழாவின் உலகளாவிய பிரபலத்துக்கு மேலும் பங்களிக்கும். ஸ்ரீ ராமரின் கொள்கைகள் நம்மை என்றென்றும் வழிநடத்தட்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த அங்கீகாரம், இந்தியாவின் கலாச்சார செல்வாக்கை உலக அரங்கில் மேலும் உயர்த்தும் வகையில் அமைந்துள்ளது. தீபாவளி, இனி இந்தியர்களின் பண்டிகை மட்டுமல்ல; உலகம் முழுவதும் மனித குலத்தின் பாரம்பரியமாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.