கரூர் சம்பவத்துக்குப் பிறகு தமிழகத்தில் விஜய் பங்கேற்கும் முதல் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற இருப்பதால், இந்த நிகழ்வைச் சுற்றி பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், நாளை (வியாழக்கிழமை) ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சுங்கச்சாவடி சரளையில் உள்ள விஜயபுரி அம்மன் கோவில் திடலில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற உள்ளார். இந்த கூட்டம், த.வெ.க.வின் அடுத்த கட்ட அரசியல் நடவடிக்கைகளுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது.

பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த், செங்கோட்டையன் மற்றும் நிர்வாகிகள் தலைமையில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்து சமய அறநிலைத்துறை மற்றும் போலீஸ் துறையால் விதிக்கப்பட்ட பல்வேறு நிபந்தனைகளை த.வெ.க. நிர்வாகிகள் ஏற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, கூட்டத்திற்கான போலீஸ் அனுமதி வழங்கப்பட்டது.

விஜய் நாளை காலை சென்னையிலிருந்து விமானம் மூலம் கோவை வருகிறார். அங்கிருந்து கார் மூலம் நேரடியாக கூட்டம் நடைபெறும் இடத்துக்கு வருவார். காலை 11 மணிக்கு கூட்டம் தொடங்கும். விஜய், சிறப்பாக வடிவமைக்கப்பட்ட பிரசார வாகனத்தின் மீது நின்று உரையாற்ற உள்ளார். அந்த வாகனம் நிறுத்தப்படும் பகுதி, பொதுமக்கள் தெளிவாக பார்க்கும் வகையில் மைதானம் முழுவதும் பிரிவுகளாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு பிரிவிலும் 400 முதல் 500 பேர் வரை நிற்கும் வகையில் இரும்புக் கம்பிகளால் ஆன தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.

விஜய் கட்சியை தொடங்கிய பிறகு விக்கிரவாண்டியில் நடந்த முதல் மாநாட்டில் 46 நிமிடங்கள் பேசினார். பின்னர் மதுரையில் நடந்த மாநாட்டில் 35 நிமிடங்கள் உரையாற்றினார். சமீபத்தில் புதுவையில் நடந்த பிரசாரத்தில் அவர் 12 நிமிடங்கள் மட்டுமே பேசினார். இந்த முறை குறைந்தது 30 நிமிடங்கள் உரையாற்ற வேண்டும் என செங்கோட்டையன் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

பாதுகாப்பு ஏற்பாடுகளும் மிகுந்த தீவிரத்துடன் செய்யப்பட்டுள்ளன. ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள் உட்பட மொத்தம் 1,500 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். போக்குவரத்து மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள், மருத்துவக் குழுவினரும் தயார் நிலையில் உள்ளனர்.

செங்கோட்டையன் த.வெ.க.வில் இணைந்த பிறகு நடைபெறும் முதல் பெரிய பொதுக்கூட்டம் என்பதால், இந்த நிகழ்வு அரசியல் ரீதியாகவும் முக்கியத்துவம் பெறுகிறது. மேலும், பிற கட்சிகளைச் சேர்ந்த சில முக்கிய பிரமுகர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் விஜய் முன்னிலையில் த.வெ.க.வில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அறிவிப்பை செங்கோட்டையன் ரகசியமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

மேலும், இந்த பொதுக்கூட்டத்தில் விஜய் பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாகவும், அதனால் கூட்டத்தின் மீது மாநிலம் முழுவதும் கவனம் திரும்பியுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்கள் மதிப்பிடுகின்றன.