சென்னை:
தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, முதல் முறையாக தேர்தல் களத்தில் இறங்கும் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) கடந்த 6-ஆம் தேதி முதல் விருப்ப மனுக்களை வழங்கத் தொடங்கியது. கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இணைவது என்பது இதுவரை உறுதியாகாத நிலையிலும், மாநிலத்தின் 234 தொகுதிகளுக்குமான விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.

சென்னை பனையூரில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் விருப்ப மனு விநியோகம் தொடங்கிய முதல் நாளிலேயே எதிர்பாராத அளவில் பெரும் வரவேற்பு கிடைத்தது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்வத்துடன் விருப்ப மனுக்களை பெற்றதால், ஒரே நாளில் சுமார் 10 ஆயிரம் மனுக்கள் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. அலுவலக வளாகம் முழுவதும் கூட்டம் நிரம்பி, பனையூர் பகுதியே கடும் போக்குவரத்து நெரிசலுக்கு உள்ளானது.
அதிகமான கூட்டம் மற்றும் போக்குவரத்து சிரமம் காரணமாக, உள்ளூர் மக்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து, கட்சி தலைமை விருப்ப மனுக்களை நேரில் வந்து பெற வேண்டிய அவசியமில்லை; ஆன்லைன் வழியாகவும் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்தது. இந்த அறிவிப்புக்குப் பிறகு, ஆன்லைன் மூலம் பெரும் எண்ணிக்கையில் மனுக்கள் பெறப்பட்டன.
கட்சியின் தகவலின்படி, பனையூர் அலுவலகத்தில் நேரடியாக 10 ஆயிரம் பேரும், ஆன்லைன் வழியாக சுமார் 40 ஆயிரம் பேரும் விருப்ப மனுக்களை பெற்றுள்ளனர். மொத்தமாக 50 ஆயிரம் பேர் தவெக சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மனுவிற்கும் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை உரிய கட்டணத்துடன் சமர்ப்பிக்க இன்றே இறுதி நாள் என கட்சி அறிவித்திருந்தது. இறுதி நாளில் பெரும் திரளான கூட்டம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பனையூர் தலைமை அலுவலகம் வெறிச்சோடிய நிலையில் காணப்பட்டது.
விருப்ப மனுக்களை சமர்ப்பிக்க வந்த சில தொண்டர்கள், அலுவலகத்தில் தலைமை நிர்வாகிகள் எவரும் இல்லாததால் ஏமாற்றத்துடன் திரும்பியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இறுதி நாளில் கூட அதிகாரிகள் இல்லாதது கட்சி வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.
தொடக்க நாட்களில் மிகுந்த ஆர்வத்துடன் மனுக்கள் பெறப்பட்ட நிலையில், சமர்ப்பிக்கும் இறுதி நாளில் ஏற்பட்ட இந்த அமைதி பல கேள்விகளை எழுப்பியுள்ளது. விருப்ப மனுக்கள் பரிசீலனை மற்றும் வேட்பாளர் தேர்வு செயல்முறை எவ்வாறு நடைபெறும் என்பது குறித்து கட்சி தலைமையகம் விரைவில் விளக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல் முறையாக சட்டசபை தேர்தலில் களம் காணும் தவெக, இந்த முறை எத்தனை தொகுதிகளில் போட்டியிடும், கூட்டணி அமைப்பு எப்படி அமையும், வேட்பாளர் தேர்வு எந்த அளவுக்கு சீர்தரமாக இருக்கும் என்பவை அரசியல் வட்டாரங்களில் கவனத்துடன் பார்க்கப்படுகின்றன.