ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு: தவெக வெளியிட்ட முக்கிய வழிகாட்டு நெறிமுறைகள்
ஈரோடு மாவட்டத்தின் மூங்கில்பாளையத்தில் வரும் டிசம்பர் 18ஆம் தேதி நடைபெறவுள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தவெக தலைவர் விஜய் கலந்து கொள்ள உள்ளார். காலை 11 மணிக்கு தொடங்கும் இந்த நிகழ்ச்சிக்கான தயாரிப்புகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், கலந்து கொள்ளும் பொதுமக்கள் மற்றும் கழகத் தோழர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை தவெக தலைமை வெளியிட்டுள்ளது.
காவல் துறையின் முழுமையான பாதுகாப்பு வழிமுறைகளின் அடிப்படையில் நிகழ்ச்சி நடைபெற இருப்பதால், அனைவரும் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தலைவரின் பாதுகாப்பில் எந்தவித சமரசமும் செய்யப்படாது என்பதால், கூட்ட நெரிசல் மற்றும் பாதுகாப்பு சிக்கல்கள் தவிர்க்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
நிகழ்ச்சிக்காக அமைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு பிரிவிலும் (BOX) காவல் துறையின் அறிவுறுத்தலின்படி மட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலேயே மக்கள் அனுமதிக்கப்படுவார்கள். கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தையுடன் வரும் பெண்கள், முதியவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், பள்ளி மாணவர்கள், சிறுமியர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் நேரடியாக நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டாம் எனவும், அவர்கள் வீட்டிலிருந்தே நேரலையைப் பார்ப்பது பாதுகாப்பானது எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விஜய் வருகை மற்றும் புறப்படும் நேரங்களில் அவரது வாகனத்தை இருசக்கர வாகனங்கள் அல்லது பிற வாகனங்களில் பின்தொடர்வது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீறுவது, பட்டாசு வெடிப்பது போன்ற செயல்கள் அனுமதிக்கப்படமாட்டாது. வாகனங்களை காவல் துறை அனுமதித்துள்ள இடங்களில் மட்டுமே நிறுத்த வேண்டும்; பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் நிறுத்துவது தவிர்க்கப்பட வேண்டும்.
நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலும், செல்லும்‑வரும் வழிகளிலும் சட்டம் ஒழுங்கை பேணும் வகையில் அனைவரும் கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். பிறர் மனம் புண்படும் வகையில் பேசுதல் அல்லது நடந்து கொள்வது தவிர்க்கப்பட வேண்டும். தன்னார்வலர்கள் சீருடை அணிந்து பணியில் ஈடுபட வேண்டும்.
உயர்நீதிமன்ற உத்தரவின்படி, தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் பிற சாலைகளின் இருபுறங்களிலும் அனுமதி இல்லாமல் பிளக்ஸ், பேனர், அலங்கார வளைவு, கொடி கம்பம் போன்றவை வைக்கக் கூடாது. அரசு மற்றும் தனியார் கட்டடங்கள், மரங்கள், வாகனங்கள், மின்கம்பங்கள், மின்மாற்றிகள் போன்றவற்றின் மீது ஏறுதல் அல்லது அருகில் செல்வதும் தடைசெய்யப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி நேரத்தில் ஆம்புலன்ஸ், பொதுமக்கள், மாணவர்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு போக்குவரத்து இடையூறு ஏற்படாத வகையில் அனைவரும் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும். நிகழ்ச்சி முடிந்ததும் அமைதியாக கலைந்து செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற மாவட்டப் பொறுப்பாளர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறு தவெக தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.