செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இன்று நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகம் வந்தடைந்தார்.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நடைபெறும் இந்த முக்கிய பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள பிரதமர் மோடி இன்று பிற்பகல் 2.15 மணியளவில் சென்னை வருவார் என திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அவரது வருகையில் சிறிது தாமதம் ஏற்பட்ட நிலையில், பிற்பகல் 2.40 மணியளவில் பிரதமர் மோடி சென்னை விமான நிலையத்தை வந்தடைந்தார்.

சென்னை விமான நிலையத்தில் அவரை தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, தலைமைச் செயலாளர் முருகானந்தம், டிஜிபி வெங்கட்ராமன், அமைச்சர் தா.மோ. அன்பரசன், பாஜக மற்றும் அதிமுக முக்கிய தலைவர்கள் ஆகியோர் வரவேற்றனர். அதிகாரப்பூர்வ வரவேற்பை ஏற்றுக்கொண்ட பிரதமர் மோடி, அங்கிருந்து உடனடியாக ஹெலிகாப்டர் மூலம் மதுராந்தகத்தை நோக்கி புறப்பட்டார்.
பிரதமர் மோடி மதுராந்தகத்தில் உள்ள ஹெலிகாப்டர் இறங்குதளத்தை வந்தடைந்தபோது, அவரை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றனர். இந்த வரவேற்பில் அதிமுக துணைப் பொதுச் செயலாளர்கள் கே.பி. முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், பொருளாளர் திண்டுக்கல் சீனுவாசன், தலைமைச் செயலாளர் எஸ்.பி. வேலுமணி, முன்னாள் அமைச்சர் தங்கமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த பிற கட்சி தலைவர்களும் பிரதமரை வரவேற்றனர்.
இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்ட மேடையில் அரசியல் வட்டாரங்களில் கவனம் ஈர்க்கும் ஒரு நிகழ்வு இடம்பெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் ஒரே மேடையில் சந்தித்து கை குலுக்கியனர். மேடைக்கு வந்த எடப்பாடி பழனிசாமியை டிடிவி தினகரன் முகம் மலர வரவேற்றார். தொடர்ந்து இருவரும் ஒரே மேடையில் அருகருகே அமர்ந்தனர்.
இந்த கை குலுக்கல் மற்றும் மேடை சந்திப்பு, தேசிய ஜனநாயக கூட்டணியில் அரசியல் ஒற்றுமை வெளிப்பட்டதாக அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். முன்னதாக, டிடிவி தினகரனுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தண்ணீர் பாட்டில் வழங்கியதும் மேடையில் கவனம் பெற்றது.
மொத்தத்தில், பிரதமர் மோடியின் வருகை, கூட்டணி தலைவர்களின் ஒருங்கிணைந்த மேடை தோற்றம் மற்றும் முக்கிய அரசியல் முகங்களின் சந்திப்பு ஆகியவை, மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டத்திற்கு கூடுதல் முக்கியத்துவத்தை அளித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.