தேனி:
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அதிகாரப்பூர்வமாக அதிமுக–பாஜக கூட்டணியில் இணைந்துள்ளார். இந்த இணைப்பு, தமிழக அரசியலில் முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக முக்குலத்தோர் வாக்கு வங்கி அரசியலில் புதிய மாற்றம் உருவாகும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.

இருப்பினும், தினகரனின் இணைப்பு எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணிக்கு எவ்வளவு வலிமை சேர்க்கும் என்பது குறித்து அரசியல் வட்டாரங்களில் கேள்விகள் எழுந்துள்ளன. தினகரன் இணைப்பு “உண்மையான வாக்கு மாற்றம்” என கூற முடியுமா என்பது மீதமும் விவாதமாக உள்ளது.


முக்குலத்தோர் வாக்கு – முழுமையாக மாறுமா?

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தென் மாவட்டங்களில் தினகரன் தனித்த அரசியல் முகமாக உருவானார். அவருக்கு முக்குலத்தோர் சமூகத்தில் ஒரு அளவுக்கு உணர்ச்சிப்பூர்வ ஆதரவு கிடைத்தது. ஆனால், கடந்த தேர்தல்களில் அதிமுகவும் அமமுகவும் தனித்தனியாக போட்டியிட்டபோது, ஒரே சமூக வாக்குகள் இரண்டாகப் பிளந்தன. அந்த வாக்கு பிளவுதான் திமுகவுக்கு பல இடங்களில் சாதகமான சூழலை ஏற்படுத்தியது.

இப்போது தினகரன் கூட்டணியில் சேர்ந்திருப்பதால், அந்த பிளவு குறையும் வாய்ப்பு உள்ளது. இது அதிமுக–பாஜக கூட்டணிக்குப் பெரிய பலனாக கருதப்படுகிறது. தென் மாவட்டங்களில் சிறிய வாக்கு வித்தியாசத்தில் முடிவு மாறும் இடங்களில், இந்த மாற்றம் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.


எடப்பாடி–தினகரன் உறவு இன்னும் சீராகுமா?

தினகரன் கூட்டணியில் சேர்ந்திருந்தாலும், எடப்பாடி பழனிசாமியுடன் அவரின் உறவு இன்னும் உறுதியானதாக தெரியவில்லை. “முதலமைச்சர் வேட்பாளர் யார்?” என்ற கேள்விக்கு, “அது எல்லோருக்கும் தெரியும்” என தினகரன் பதிலளித்தது இதற்குச் சான்றாக உள்ளது.

அவரது உரையில் எடப்பாடி பெயரைச் சொல்லத் தவிர்த்திருப்பது, “தலைமைக்கு மரியாதை காட்டாதது” என அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. இது, “நான் இந்த தலைமையை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை” என்ற மறைமுக சிக்னலாகவே பார்க்கப்படுகிறது. இதனால் கூட்டணிக்குள் உள்ள ஒற்றுமை கேள்விக்குறியாகி உள்ளது.


பாஜகக்கான சவால் – எதிர்க்கட்சிக்கான வாய்ப்பு

தேர்தல் காலத்தில் ஒரே மேடையில் தினகரனும் எடப்பாடியும் தோன்றும் சூழல் வந்தால், இருவரும் எப்படி நடப்பார்கள் என்பது அரசியல் வட்டாரங்களில் பெரும் ஆர்வத்துடன் கவனிக்கப்படுகிறது. முகத்தில் சிரிப்பிருந்தாலும், உள்ளுக்குள் பிளவு இருந்தால், அது முக்குலத்தோர் வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் அபாயம் உள்ளது.

மக்களின் மனநிலை அரசியலை தீர்மானிக்கும் முக்கிய அம்சம் என்பதால், தலைவர்கள் ஒருமைப்பாட்டில் இல்லாத நிலைமை வாக்கு மாற்றத்தை பாதிக்கக்கூடும்.