சென்னை:

சமுதாய வளர்ச்சிக்காக சிறப்பான சேவைகளை ஆற்றி வரும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்படும் “முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது 2026”க்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பங்களை வரும் ஜூலை 6-ஆம் தேதி மாலை 5.45 மணி வரை ஆன்லைன் மூலம் சமர்ப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சமூக நலன் மற்றும் இளைஞர் முன்னேற்றத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கும் இளைஞர்களின் சேவையை அங்கீகரிக்கும் நோக்கில் ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவையொட்டி, 15 முதல் 35 வயது வரையிலான 3 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் என மொத்தம் 6 பேருக்கு இந்த உயரிய மாநில விருது வழங்கப்படுகிறது. விருது பெறுவோருக்கு தலா ரூ.1 லட்சம் ரொக்கப் பரிசு, பாராட்டுச் சான்றிதழ் மற்றும் பதக்கம் வழங்கப்படும்.

2026-ஆம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது, வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்பட உள்ளது.

விண்ணப்பிக்க தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் 15 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • 01.04.2025 அன்று 15 வயது பூர்த்தி செய்தவராகவும், 31.03.2026 அன்று 35 வயதுக்குள் உள்ளவராகவும் இருக்க வேண்டும்.
  • கடந்த நிதியாண்டான 01.04.2025 முதல் 31.03.2026 வரை மேற்கொண்ட சமூக சேவைகள் மட்டுமே பரிசீலனை செய்யப்படும்.
  • குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்திருக்க வேண்டும். அதற்கான ஆதார ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.
  • சமூக நலனுக்காக தன்னார்வத் தொண்டாற்றியிருக்க வேண்டும்.
  • மேற்கொண்ட சேவைகள் தெளிவாக அடையாளம் காணக்கூடியதாகவும், அளவிடக்கூடிய விளைவுகளை ஏற்படுத்தியதாகவும் இருக்க வேண்டும்.

யார் விண்ணப்பிக்க முடியாது?

மத்திய மற்றும் மாநில அரசுத் துறைகளில் பணிபுரிபவர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள், பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் இந்த விருதிற்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வில் கவனிக்கப்படும் அம்சங்கள்

விண்ணப்பதாரரின் சமூக செல்வாக்கு, பொதுமக்களிடையே அவருக்கு இருக்கும் மதிப்பு, சமூக முன்னேற்றத்திற்காக செய்த பணிகளின் தாக்கம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் மதிப்பீட்டில் கருத்தில் கொள்ளப்படும்.

கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக நீதி, சுகாதாரம், இளைஞர் மேம்பாடு, கிராமப்புற முன்னேற்றம், பெண்கள் நலன், மாற்றுத்திறனாளிகள் உதவி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சேவை புரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கடைசி நாள்

விருதிற்கு விண்ணப்பிக்க விரும்பும் இளைஞர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி நாள் 06.07.2026 மாலை 5.45 மணி என தமிழக அரசு அறிவித்துள்ளது.

சமூக சேவையில் ஈடுபட்டு வரும் இளைஞர்களுக்கு தங்களது பணியை மாநில அளவில் அங்கீகரிக்கச் செய்வதற்கான சிறந்த வாய்ப்பாக இந்த விருது கருதப்படுகிறது.