பெங்களூரு:

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் கடுமையான போர் பதற்றம் காரணமாக அங்கு வசித்து வரும் இந்தியர்களின் பாதுகாப்பு குறித்து கவலை அதிகரித்துள்ளது. சமீபத்தில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இணைந்து ஈரான் மீது அதிரடி தாக்குதல் நடத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் ஈரானின் அணு சக்தி மையங்கள், அணு உள்கட்டமைப்புகள் மற்றும் முக்கிய ராணுவ தளங்கள் குறிவைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலின் போது ஈரான் உயர் மட்ட தலைவர்கள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பலர் உயிரிழந்ததாக தகவல்கள் பரவி வருகின்றன. இதையடுத்து ஈரான், இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் உள்ள பகுதிகள் மீது பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு முழுவதும் பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

போரின் தீவிரம் அதிகரித்ததைத் தொடர்ந்து பல மத்திய கிழக்கு நாடுகள் தங்கள் வான்வழிப் போக்குவரத்தை தற்காலிகமாக நிறுத்தியுள்ளன. பல நாடுகள் வான்பரப்பை மூடியுள்ளதால், விமான சேவைகள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக அங்கு வேலை மற்றும் தொழிலுக்காக வசித்து வரும் லட்சக்கணக்கான இந்தியர்கள் தாய்நாடு திரும்ப முடியாமல் சிக்கித் தவிக்கின்றனர்.

இந்த நிலைமையை முன்னிட்டு, மத்திய அரசு அவசர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மத்திய அமைச்சர் பிரஹலாத் ஜோஷி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “உலகின் எந்த பகுதியிலாவது இந்தியர்கள் சிக்கலில் இருந்தாலும், அவர்களை பாதுகாப்பாக மீட்பது மத்திய அரசின் முதன்மை கடமை. அவர்களின் உயிர் மற்றும் பாதுகாப்பு எங்களுக்கு மிக முக்கியம்” என்று கூறினார்.

மேலும், ரஷியா–உக்ரைன் போர் காலத்தில் உக்ரைனில் சிக்கியிருந்த ஆயிரக்கணக்கான இந்தியர்களை வெற்றிகரமாக மீட்ட அனுபவம் அரசுக்கு இருப்பதை அவர் நினைவுபடுத்தினார். அதுபோல், தற்போதைய சூழ்நிலையிலும் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றார்.

மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள இந்தியர்கள் தேவையற்ற பதற்றத்திற்கு ஆளாக வேண்டாம் என்றும், இந்திய தூதரகங்கள் மற்றும் வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். அவசர அவசரமாக பாதுகாப்பான வெளியேற்ற திட்டங்கள் தயாராகி வருவதாகவும் கூறினார்.

இந்த அறிவிப்பு, மத்திய கிழக்கில் வசிக்கும் இந்தியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் ஓரளவு நிம்மதியை அளித்துள்ளது. போர் சூழ்நிலை எவ்வாறு மாறும் என்பது தெளிவாக தெரியாத நிலையில், இந்தியர்களை பாதுகாப்பாக நாட்டிற்கு கொண்டு வருவதற்கான திட்டங்கள் விரைவில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.