புதுச்சேரி,
புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 9ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பா.ஜ.க., என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க. மற்றும் லட்சிய ஜனநாயக கட்சிகள் இணைந்து தேசிய ஜனநாயக கூட்டணியாக களம் காண்கின்றன.

இந்த நிலையில், கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி இன்று புதுச்சேரியில் ரோடு ஷோ நடத்துகிறார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். பின்னர் சென்னை விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி நோக்கி புறப்பட்டார்.
புதுச்சேரி விமான நிலையத்திற்கு வந்தடைந்த பிரதமர் மோடியை, முதல்-மந்திரி ரங்கசாமி மற்றும் பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாகமாக வரவேற்றனர். அதன் பின்னர் அவர் கார் மூலம் அஜந்தா சிக்னல் சந்திப்புக்கு சென்றார்.
அங்கிருந்து திறந்த வாகனத்தில் ஏறி, பொதுமக்கள் மத்தியில் ரோடு ஷோ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு கோர உள்ளார். இந்த ரோடு ஷோ நிகழ்ச்சி அஜந்தா சிக்னலில் தொடங்கி ராஜா தியேட்டர் சந்திப்பு வரை நடைபெற உள்ளது.
பிரதமரின் வருகையை முன்னிட்டு புதுச்சேரி முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஐந்து அடுக்கு பாதுகாப்பு அமைப்பு அமல்படுத்தப்பட்டு, முக்கிய பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், பாதுகாப்பு காரணங்களுக்காக டிரோன் பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளதால், பொதுமக்கள் சிரமம் இன்றி நகர்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. பிரதமரின் ரோடு ஷோவில் பெருமளவு மக்கள் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரோடு ஷோ நிகழ்ச்சியை முடித்துவிட்டு, பிரதமர் மீண்டும் புதுச்சேரி விமான நிலையத்திற்கு திரும்பி, இன்று இரவே ஹெலிகாப்டர் மூலம் சென்னை செல்ல உள்ளார்.
மொத்தத்தில், புதுச்சேரியில் நடைபெறும் பிரதமர் மோடியின் இந்த பிரசார நிகழ்ச்சி, தேர்தல் களத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்தும் என அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன.