தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை வருகின்ற நான்காம் தேதி நடைபெற உள்ளது. இந்த வாக்கு எண்ணிக்கைப் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கான கடுமையான விதிமுறைகளைத் தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. வாக்கு எண்ணிக்கை மையத்திற்குள் பாதுகாப்பு மற்றும் நேர்மையைப் பேண, காவல்துறையினரின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தித் தேர்தல் ஆணையம் புதிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.

அதன்படி, சீருடையுடன் அல்லது சீருடை அணியாத எந்தவொரு காவல்துறையினரும் வாக்கு எண்ணும் அறைக்குள் நுழைய அனுமதி கிடையாது. தேர்தல் நடத்தும் அலுவலர் அவசியமான காரணங்களுக்காக அழைத்தால் மட்டுமே, காவல்துறை அதிகாரிகள் உள்ளே வர முடியும். அவ்வாறு அழைக்கப்படாத பட்சத்தில், எந்தவொரு சூழ்நிலையிலும் போலீசார் உள்ளே நுழையக் கூடாது எனத் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வாக்கு எண்ணிக்கை அன்று காலை எட்டு மணிக்குத் தொடங்கும். இருப்பினும், பணியில் ஈடுபடும் மேற்பார்வையாளர்கள், நுண் பார்வையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் அனைவரும் காலை ஐந்து மணிக்கே வாக்கு எண்ணும் மையத்திற்கு வந்துவிட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர்கள், தேர்தல் பணியில் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் முகவர்கள் மட்டுமே வாக்கு எண்ணும் அறைக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.
வாக்கு எண்ணிக்கை நடைமுறைகள் மிகவும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு சுற்றிலும் வேட்பாளர்கள் பெற்ற வாக்கு விவரங்களைக் கரும்பலகையில் தேர்தல் நடத்தும் அலுவலர் எழுத வேண்டும். ஒவ்வொரு சுற்று முடிவையும் உடனுக்குடன் ஊடகங்களுக்குத் தெரிவிக்க வேண்டும். வெற்றிக்கான வாக்கு வித்தியாசம், தபால் வாக்குகளின் எண்ணிக்கையை விடக் குறைவாக இருந்தால், தபால் வாக்குகளை மீண்டும் எண்ண வேண்டும். கடைசிச் சுற்றின் முடிவில், ஒவ்வொரு தொகுதியிலும் தலா ஐந்து வாக்குச்சாவடிகளின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் இணைக்கப்பட்டுள்ள சரிபார்ப்பு இயந்திரங்களின் சீட்டுகளை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்துச் சரிபார்க்க வேண்டும்.
வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் சரிபார்ப்பு இயந்திரங்கள் அனைத்தும் உரிய பாதுகாப்பு அறைக்கு மாற்றப்பட்டு முத்திரையிடப்படும். கட்டுப்பாட்டு இயந்திரத்தின் முடிவுகளைக் காட்டும் பகுதியை மூடி சீலிட வேண்டும். தேர்தல் நடத்தும் அலுவலரின் முத்திரையுடன், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் ரகசிய முத்திரையும் இடப்பட வேண்டும். தேர்தல் தொடர்பான ஆவணங்களான வாக்காளர் பதிவேடு, பயன்படுத்தப்படாத தபால் வாக்குகள் மற்றும் பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் அனைத்தையும் உலோகப் பெட்டிகளில் வைத்துப் பூட்டி முத்திரையிட வேண்டும். இந்த அறைகள் மற்றும் பெட்டிகளின் பாதுகாப்பு குறித்து மூத்த அலுவலர்கள் கண்காணிக்க வேண்டும். வேட்பாளர்கள் அல்லது முகவர்கள் விரும்பினால் அவர்களது முத்திரையையும் இந்தச் சீலிடும் பணிகளில் பயன்படுத்தலாம். முத்திரையிடப்பட்ட ரகசிய முத்திரைகள் மற்றும் அனைத்து ஆவணங்களும் இருபத்தி நான்கு மணி நேரத்திற்குள் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் மூலம் தேர்தல் முடிவுகளின் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படும்.