வாஷிங்டன்: ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு (AI) பிரிவு தலைவராக இந்திய வம்சாவளியை சேர்ந்த அமர் சுப்ரமணியா நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது இந்தப் பொறுப்பில் உள்ள ஜான் கியானாண்ட்ரியா ஓய்வு பெறவுள்ள நிலையில், அவருக்குப் பதிலாக அமர் சுப்ரமணியாவை ஆப்பிள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அமர் சுப்ரமணியா முன்பு மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் AI பிரிவில் கார்ப்பரேட் துணைத்தலைவராக பணியாற்றியவர். அதற்கு முன்னர், கூகுள் நிறுவனத்தில் 16 ஆண்டுகள் பணியாற்றி, கூகுள் டிஜிட்டல் அசிஸ்டெண்ட் (Google Assistant) பொறியியல் பிரிவின் தலைவராக இருந்துள்ளார்.
யார் இந்த அமர் சுப்ரமணியா?
1997–2001 காலத்தில் பெங்களூரு பல்கலைக்கழகத்தில் பொறியியல் பட்டம் பெற்றார்.
2009-ல் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி முடித்தார்.
2001 வரை ஐபிஎம் நிறுவனத்தில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி பின்னர் மைக்ரோசாப்டில் சேர்ந்தார்.
ஒரு ஆண்டுக்குப் பிறகு கூகுளில் இணைந்து, 8 ஆண்டுகள் ஆராய்ச்சி விஞ்ஞானியாக, பின்னர் கூகுள் ஜெமினி பிரிவின் துணைத்தலைவராக முக்கிய பொறுப்புகளில் பணியாற்றினார்.
2025-ல் மைக்ரோசாப்டின் AI பிரிவு கார்ப்பரேட் துணைத்தலைவராக பதவி ஏற்ற அவர், தற்போது ஆப்பிளில் இணைந்துள்ளார்.
ஆப்பிள் சிஇஓ டிம் குக்கின் பாராட்டு
ஆப்பிள் தலைவர் டிம் குக் வெளியிட்ட அறிக்கையில்:
“ஆப்பிளின் நீண்டகால துறைத்திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு ஒரு முக்கிய தூணாக இருந்து வருகிறது. அமர் சுப்ரமணியாவை எங்கள் குழுவில் வரவேற்பதில் மகிழ்ச்சி. அவரது அசாதாரண AI நிபுணத்துவம் ஆப்பிளின் AI மாதிரிகள், இயந்திரக் கற்றல் ஆராய்ச்சி, AI பாதுகாப்பு ஆகிய துறைகளில் மிகப்பெரும் பங்களிப்பாக இருக்கும்.”
அவர் ஆப்பிளின் தற்போதைய மற்றும் எதிர்கால AI புதுமைகளின் வளர்ச்சிக்கு தலைமையேற்க உள்ளார் என்றும் டிம் குக் தெரிவித்தார்.