புதுடெல்லி: இந்தியா-ரஷ்யா இடையிலான வர்த்தகம் கடந்த மூன்று ஆண்டுகளில் 80 சதவீதம் உயர்ந்துள்ளது என்று ரஷ்ய அதிபர் புடின் தெரிவித்துள்ளார். 2030 ஆம் ஆண்டுக்குள் இரு நாடுகளின் வர்த்தக பரிமாணம் 100 பில்லியன் டாலரை எட்டும் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்தியா-ரஷ்யா இடையிலான வர்த்தக மாநாடு டில்லியில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடியும், அதிபர் புடினும் கலந்து கொண்டனர்.

புடின் பேச்சு: ரஷ்ய குழுவினர் எரிசக்தி, எண்ணெய் மற்றும் காஸ் இறக்குமதிக்கு மட்டுமே வரவில்லை; பல துறைகளில் இந்தியாவுடன் உறவை விரிவுபடுத்த விரும்புகிறோம். இந்தியா பல துறைகளில் பரந்த வாய்ப்புகளைக் கொண்டுள்ளது, ஆனால் இதுவரை இரு தரப்பும் அதைப் பயன்படுத்தவில்லை. இதனால் தான் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மோடியின் தலைமையில், இந்தியா சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட கொள்கையை பின்பற்றி வருகிறது. அதேநேரம் பொருளாதார வளர்ச்சியிலும் சிறந்த பலன்களைப் பெறுகிறது. இந்திய பொருளாதாரம் உலகின் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாகும்.

முக்கிய அம்சங்கள்:

  • பிரதமர் மோடி தலைமையிலான “மேக் இன் இந்தியா” மற்றும் பொருளாதார கொள்கைகள் தொழில்நுட்ப மற்றும் வணிக வளர்ச்சியை ஊக்குவிக்கின்றன.

  • இந்தியாவின் ஐடி, மருந்துத்துறை உலக அளவில் முன்னணி இடத்தை பிடித்துள்ளது.

  • இரு நாடுகளும் நீண்டகால வர்த்தக கூட்டாளிகள், கடந்த மூன்று ஆண்டுகளில் வர்த்தகம் 80% உயர்ந்துள்ளது.

  • ரஷ்யா, இந்தியா இரு பெரிய நுகர்வோர் சந்தைகளை கொண்டுள்ளன, மேலும் முதலீட்டுப் பல வாய்ப்புகள் உள்ளன.

பிரதமர் மோடி பேச்சு:
புடின் அழைத்து கொண்ட வர்த்தக குழு இந்தியா-யுரேஷியா பொருளாதார யூனியன் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தைக்கு முக்கிய அம்சமாக உள்ளது. இரு நாடுகளின் வர்த்தக இலக்கு 2030 ஆம் ஆண்டுக்குள் 8 லட்சம் கோடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆனால், இந்த இலக்கை முன்கூட்டியே அடைய முடியும் என நாங்கள் உறுதியாக செயல்படுகிறோம்.

வரி மற்றும் வரி அல்லாத தடைகள் குறைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 11 ஆண்டுகளில் இந்தியா அடைந்த பொருளாதார வளர்ச்சி மற்றும் அளவு உலகில் முன்னோடியற்றது. சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் கொள்கைகளை பின்பற்றி இந்தியா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரமாக முன்னேறுகிறது. திறமையான இளைஞர்கள் உலகின் எந்தவொரு தேவையையும் சமாளிக்க தயாராக உள்ளனர்.